வெள்ளி, 15 ஏப்ரல், 2011

அச்சா, அச்சா, அச்சச்சோ, அச்சச்சோ!


 தனது வீட்டில் மெகா டிவியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.வி.தங்கபாலு, நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  அவரது மனைவி ஜெயந்தி அவரிடம்  நைசாக பேச ஆரம்பிக்கிறார்.

ஜெயந்தி: 19 பேரை நீக்குனதற்கே உங்கள பதவியில இருந்து நீக்கணும்னு சொல்றது சரியாவா இருக்கு?

தங்கபாலு:  காங்கிரஸ் ஆரம்பிச்ச நேரத்திலேயே கோஷ்டின்னு ஒன்ணு  ஆரம்பிச்சடுச்சு! மூக்குன்னு ஒன்ணு இருந்தால் ஜலதோசம் இருக்கத்தான் செய்யும். தலைவர் பதவியில இருந்தால் இதையெல்லாம் தாங்கித்தான் ஆகணும், இப்படி கட்சிக்குள்ளே பள்ளம் பறிக்கிறவன்கள பார்த்து தான்“  காங்கிரஸ்காரன் தெற்குப்பக்கம் போனால், அவனோட நிழல வடக்குப் போகும்னு“ கிண்டல் அடிக்கிறாங்க!

ஜெயந்தி: இப்ப இந்தப் பிரச்சனையை எப்படித் தான் தீர்க்கிறது?

தங்கபாலு: உன் பிரச்சனையை எப்படி சால்வ் செஞ்சேனே அப்படி தான்! கையெழுத்து போடாத வேட்பாளர் பாரம் ஏற்றுக் கொள்ளப்படாதுன்னு ஊருக்கே தெரியும், எனக்குத் தெரியாம இருக்குமா? ஆனாலும், தாக்கல் செய்யலையா? டம்மி வேட்பாளர் நான், வேட்பாளராக மாறலையா? அது மாதிரி ஏதாவது செஞ்சு இப்பிரச்சனையைத் தீர்த்திடமாட்டேன்! 

(தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினரும், சென்னையின் முன்னாள் துணைமேயருமான கராத்தே தியாகராஜன், தென் சென்னை மாவட்டத்தலைவர் மங்கள்ராஜ், மாநில எஸ்.சி, எஸ்.டி.பிரிவு தலைவர் செங்கை செல்லப்பா ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர்)
செல்லப்பா: வேட்பாளர் அறிவிச்ச போதே சொன்னேன். இந்திய தேசிய காங்கிரஸ், தங்கபாலு காங்கிரசா மாறிப்போச்சுன்னு! ஆனா யாரும் அப்ப நம்பல , , ,  இப்ப பாருங்க! எல்லாருக்கும் சேர்த்து கட்டம் கட்டிட்டார்!
கராத்தே: பொல்லாத காலத்தில் புடலங்காயும் பாம்பாகும் எனச்சொல்வார்கள்.  தான் தோற்றுப்போவாம் என தெரிந்து கொண்ட தங்கபாலு, எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 19 பேரை நீக்கியுள்ளார். இவர் என்ன ராகுல்காந்தியா? நினைச்சவுடன் நீக்குறதற்கு?
(அப்போது அங்கு நடிகர் எஸ்.வி.சேகர் வருகிறார்)
எஸ்.வி.சேகர்:  “அமெரிக்காவில் அருக்காணி“ என்ற தொடர் எடுத்த மாதிரி “மைலாப்பூரில் டபாலு“ன்னு ஒரு நாடகம் எடுக்கப்போறேன்.
மங்கள்ராஜ்: உங்க வால்பையன் வேலையெல்லாம் காங்கிரஸ் கட்சியில செல்லாது. நல்லவன் போல நாடகம் போடுறது பாஜகவில வேணாம் நம்புவாங்க. . .  ஆனால், காங்கிரஸ் கட்சியில நம்ப மாட்டாங்க!
எஸ்.வி.சேகர்: இப்ப நான் என்ன செய்ய?
கராத்தே: :“தம்பி“ படத்துல வருகிற மாதவன் போல,இப்ப நான் என்ன செய்ய என  மாடுலேசன்ல பேசனா? நாங்க ஒன்ணுமே செய்யல. . .  எங்களுக்கே ரிவிட்டு! இதுல ராஜ் டிவியில போய் உக்காந்து கிட்டு தங்கபாலுவ கிண்டல் அடிச்சா! விடுவாறா? அது தான் உங்களையும் எங்க லிஸ்டுல சேர்த்துட்டார்!
எஸ்.வி.சேகர்: நான் பாட்டுக்கு கிருஷ்ணா, ராமான்னு நாடகம் போட்டுக்கிட்டு இருந்தேன். என்னை எம்எல்ஏ ஆக்குன கட்சிக்கு துரோகம் செஞ்சதுக்கு இதுவும் வேணும் . .  இன்னமும் வேணும்!
மங்கள்ராஜ்: நாட்டுப்பற்றுள்ளவர் போல தேசியகொடிய நெஞ்சுல குத்திகிட்டு, பாஜகவ ஆதரிச்சீங்க . . .பிறகு அதிமுகல சீட்டு வாங்கி, திமுகவுக்கு கொடி பிடுச்சீங்க. . . காங்கிரஸ்ல சேர்ந்த பிறகாவது திருந்த வேண்டாமா? திரி கொளுத்துற வேலை செஞ்ச இப்படி தான்!
கராத்தே: இப்படியே பேசிக்கிட்டே இருந்தா எப்படி? 19பேரை கட்சிய விட்டு நீக்குனதுக்கு ஏதாவது செய்யணும்?
எஸ்.வி.சேகர்: நான் ஒரு யோசனை சொல்றேன்: கோவிச்சுக்க கூடாது, “அல்வா “ என்கிற என்னுடைய  பேமஸனா நாடகத்தை   சத்தியமூர்த்திபவன் முன்னால போடுவோம். நாடகத்தைப் பார்த்து தங்கபாலு, அவராவே பதவி வேண்டாம்னு   ஓடிடுவாரு!
கராத்தே: உங்களுக்கு காமடி தான் வரலன்னாலும், உங்க யோசனையும் இப்படியா இருக்கணும்? தில்லிக்கு பேக்ஸ்,  தந்தி, எஸ்எம்எஸ், புறா மூலம் கடிதம்னு எல்லா வகையிலும் புகார்  அனுப்புவோம். ஏற்கனவே, தங்கபாலுவ நீக்கணும்னு மொட்டையடுச்சு போராட்டம் நடந்தன ஆட்கள பிடிச்சு  தில்லியில உள்ள அக்பர் ரோட்டில அங்கபிரதட்சணம் செய்யச் சொல்வோம்.
(எல்லாரும் இதை ஆமோதிக்கிறார்கள்)
தபால்காரர்: (மனசுக்குள்) ஈரோட்டுக்காரர் மட்டும் தில்லிக்கு இவ்வளவு புகார் கடிதம் எழுதுனால், இருக்குற கோஷ்டி எல்லாம் சேர்ந்து எத்தனை மூடை வரும்?
இளங்கோவன்: தமிழகத்தில் காமராஜர் ஆட்சி வரவேண்டுமானால் அது தங்கபாலுவால் நிச்சயம் நடக்காது. நடக்காது, நடக்காது. ஆகவே, அவரை நீக்கச்சொல்லி தமிழகம் முழுவதும் இருந்து எனக்கு வந்த புகார் கடிதங்கள் தான் இவை. இவற்றை தில்லிக்கு அனுப்புகிறேன்.
காரைக்குடியில் உள்ள ஒரு உயர்தர உணவு விடுதியில்“ இளைஞர்களின் எழுஞாயிறு“ என எழுதப்பட்ட பேனர்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும்  கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்)
கார்த்தி: இளைஞர் காங்கிரசார் உள்ளிட்ட 19 பேரை தன்னிச்சையாக தங்கபாலு நீக்கியுள்ளார். அவரது நடவடிக்கைகள் குறித்து உடனடியாக ராகுல்காந்தியிடம் பேசவேண்டும். போனை போடு!
நண்பர்: லைன் பிஸியா இருக்கு!
(தங்கபாலு வீட்டில் தொலைபேசி அலறுகிறது)
தங்கபாலு: சொல்லுங்க ஜி! அச்சா, அச்சா, அச்சச்சோ ! அச்சச்சோ !
ஜெயந்தி: என்னங்க ஆச்சு?
தங்கபாலு: குலாம்நபி ஆசாத் பேசுனாரு! “உங்க மேல மூடை, மூடைய  ஏகப்பட்ட புகார் கடிதம் வந்துருக்கு . . . இது மாதிரி எப்பவும் வந்ததில்லை. எங்களால தூக்கு முடியல . . .  உடனடியா தங்கபாலுவ நீக்கலைன்னா நாங்களும் போராடுவோம்னு தில்லியில இருக்குற தபால்காரர்கள் போராட்டம் அறிவிச்சுருக்காங்களாம்!“ என்ன  செய்யப்போறீங்கன்னு கேட்கிறார்!
( தங்கபாலுவை,ஜெயந்தி பாவமாகப் பார்க்கிறார்)

கற்பனை: ப.கவிதா குமார் 









1 கருத்து:

vetripandi சொன்னது…

super kamedi kavitha....