ஞாயிறு, 27 மார்ச், 2011

காதல் கவிதைகள்



புரையேறும் போது
யாரோ நினைக்கிறார்கள் எனச்சொல்லி
தலையில் தட்டியே
உன் நினைவை
மறக்கடிக்கப் பார்க்கிறாள்  அம்மா.
                         






இடம் பொருளறியாது
எச்சமிடும் காக்கையைப் போல
காதல்.
எங்கு
எப்போது
வருமென்று தெரியவில்லை.

                       


னவு வரும் வரை
உன்னை நினைத்திருந்தேன்.
தூக்கம் வந்த பின்
கனவில்
உன்னோடு விழித்திருந்தேன்.
                            




தேடிப்பிடித்து
வாங்கி வந்த
செண்பகமலரை
தெருவில் வீசுகிறாய்.
வண்டு தீண்டாது
வாழ்வைக் கழிக்கும்
பூவை ஏன் வாங்கி வந்தாயென
என்னை ஏசுகிறாய்.

                  




ன் காலடிச்சத்தங்கள்
கற்பிக்கும் இலக்கணம்
கோனார் உரை போட்டாலும்
என்னைத் தவிர
யாராலும் அறிய முடியாதது.



பேருந்தில்
ஜன்னலோர இருக்கை
எப்போதும்
வாய்த்து விடுகிறது உனக்கு.
வெளியிலிருந்து
பார்க்கும் போது
தந்திகளுக்குப் பின்னிருக்கும்
வீணையைப் போல்
அழகாயிருக்கிறாய்.



               



வறு செய்து விட்டால்
தலையிலடித்துக் கொண்டு
நாக்கைக் கடிக்கிறாய்.
இந்த அழகைக் காண
எத்தனை முறை
வேண்டுமானாலும்
தவறு செய்யலாம் போலிருக்கிறது.


                         



நான் பேச வைத்திருக்கும்
வார்த்தைகளை
பேசாமலேயே
கண்டுபிடித்து விடுகிறாய்.
எப்படி எனக்கேட்டால்
உனக்குள் தானே
இருக்கிறேன் எனச்சிரிக்கிறாய்.
                           



ழுதி எழுதி
உன்னிடம் தராமல்
பத்திரப்படுத்தி வைத்திருந்த
கடிதங்களை
பழைய பேப்பருடன்
எடைக்குப் போட்டு
பிளாஸ்டிக் குடம் ஒன்றை
வாங்கி விட்டாள் அம்மா.
குழாயடியில்
காலியாக கிடக்கும்
அக்குடத்திற்குள்
நிரம்பி வழிகிறது
என்னுடைய காதல்.




                    



கருத்துகள் இல்லை: