சனி, 26 மார்ச், 2011

சித்திரம்








சின்னப்பிள்ளையாக இருந்ததிலிருந்து
யானை என்றால் மிகப்பயம்.
அதன் தோற்றம் ஏற்படுத்திய அச்சம்
வளர்ந்தும் போகவில்லை.
சீரடித்த குழந்தையென
சொம்பு நீரை முகத்தில்
பீய்ச்சியடித்த யானையின்
அருகாமையில் துவங்கியது பயம்.
சித்திரைத் திருவிழாவன்று
யானையின் மீதேற்றி
அலற வைத்த அண்ணனின்
குசும்பிலிருந்து
அது கொஞ்சம் கூடுதலானது.
தேசிய விநாயகர் கோவில் அருகில்
பாகன் கிழித்துப் போட்ட
தென்னை ஓலையை
தின்று கொண்டிருந்த யானையை
தூரத்தில் நின்று பார்த்த போது
திடீரென கட்டி வைத்திருந்த சங்கிலியை
அறுத்துக் கொண்டு தெருவில்
அது ஓடிய போது
தெருவே ஓடியது.
யானை போட்ட
சாணத்தை மிதித்தால்
முள் குத்தினாலும் வலிக்காதெனச் சொல்லி
கூட்டாளிகள் குதித்து மகிழும் போது
போன யானை திரும்பி வந்தால்
என்ற என் கேள்வியையும்
சேர்த்தே போட்டு மிதிப்பார்கள்.
ஒரு நாள்
பெரியார் பேருந்து நிலையத்தில்
கம்பிகளுக்கிடையே கையை நீட்டி
ஜன்னலோரம் அமர்ந்திருந்தவரிடம்
யானை பிச்சையெடுத்தபோது தான்
அதன் மீதிருந்த
சித்திரம் சிதைந்து போனது.
யானை இருந்தாலும்
ஆயிரம் பொன்
இப்படித்தான் சேகரிக்கப்படுகிறதென்றால்
இறந்தால் ...?


கருத்துகள் இல்லை: