செவ்வாய், 12 ஜூலை, 2011

தாள்களால் ஆனதென்பதால் பூநூல்களா முடிவெடுப்பது?






கன்னத்தில் முத்தமிட
கழுத்தைக் கட்டிப்பிடிக்கும்
என் செல்லமகள்
கண்டிப்புடன் சொல்வாள்
‘தாடியை எடுத்தாள் தான்
அடுத்த முறை முத்தம் தருவேன்“.

ஒவ்வொரு முறையும்
முத்தமிடும் போது
தாடி குத்துவதையே
பொறுக்க முடியாமல்
திட்டிக் கொண்டேயிருப்பாள்.
ரோஜாப்பூவின் இதழில்
முள் குத்தும் போது
அழுவதில்லையே என்றால்
கவிதையா கேட்டேன் என்பாள்.

முள் முடியின்
வலியைத் தாங்க முடியாத அவள்
இடுப்பெழும்பு ஒடிய
பாடச்சுமை சுமக்கிறாள்.
ஐந்தில் வளைவது
ஐம்பதிலும் நிமிறாது போலிருக்கிறது.
தீண்டாமை ஒரு பாவச்செயல் என்கிறது
பாடப்புத்தங்களின் முன்பக்கங்கள்.

கூலி வேலை செய்பவன் பிள்ளைக்கும்
ஆலையில் வேலை செய்பவன் பிள்ளைக்கும்
ஒரே கல்வி வழங்கு என்றால்
கூடாது என்று
கல்வி வியாபாரிகள் குதிக்கிறார்கள்.
நவீனக்குலக்கல்வி முறை தான்
வேண்டுமென கொடிபிடிக்கிறார்கள்.
தாமரைப்பூவில் அமர்ந்திருந்த
கலைவாணியை இறங்கி வந்து
கல்லாப்பெட்டியில் அமரவைத்து விட்டார்கள்.

பாடநூல்கள்
தாள்களால் ஆனதென்பதால்
அவை வேண்டுமா வேண்டாமா என
பூநூல்களா முடிவெடுப்பது?
கண்கள் கட்டப்பட்ட
நீதிதேவதையின் முன் நிற்பது
பூநூலா, பாடநூலா என்பது தான் . . .
சிந்தப்படும் ஒரு துளி மை
ஒரு தலைமுறையின் சாபத்தை
வாங்கப் போகிறதா?
அல்லது
ஒரு தலைமுறையின்
வாழ்த்தைப் பெறப்போகிறதா?

கருத்துகள் இல்லை: