புதன், 22 ஜூன், 2011

களவாணிகள் கையில் கலைவாணி







வெள்ளைத் தாமரையில்
வீற்றிருந்த கலைவாணி
பாவம்
களவாணிகள் கையில்
சிக்கித் தவிக்கிறாள்!
அவள் வீணையை விறகாய் ஒடித்து
நெருப்பில் பொருத்தி
குளிர் காய்கிறார்கள்.


பசுவின் மடியில் பால் கறந்து
விற்றது அது ஒரு காலம். . .
பள்ளி திறந்து வைத்து
கல்வி விற்பது இந்தக்காலம்.
வியாபாரிகள் மாறினார்கள்
கல்வித் தந்தையாய் . . .
உண்மைத் தந்தைகள் மாறினர்
மீளாக் கடன்காரர்களாய்.


மாதா, பிதா ,குரு
தெய்வம் என்பார்கள்.
குரு தட்சணை செலுத்த முடியாமல்
கோவையில் மாதா ஒருத்தி
நெருப்பைக் கொளுத்திச்
செத்துப்போனாள்.
அவன் மகன் பாலூற்ற
தெய்வமாகி விட்டாள்.

கட்டிடத்திற்கு நிதி
கதவுக்கு நிதி
கழிப்பறை கட்ட நிதி
விளையாட்டு திடலுக்கு நிதி
கண்ணிலே காட்டாத
கணினி பெயரில் நிதி
பெற்றோர் சங்கம் என்ற பெயரில் நிதி
அனாதைகளுக்கென
அதற்கும் ஒரு நிதி
தாமதமாய் வந்தால் நிதி
தமிழில் பேசினால் தண்டனையாய்
அதற்கும் ஒரு நிதி.



கட்டம் போட்ட
பனியன் போடாமல்
கண்களில் கறுப்புத்துணி கட்டாமல்
உயிரறுக்கும் ஆயுதமில்லாமல்
கல்வி என்ற பெயரில்
கொள்ளையர்கள் வருகிறார்கள்.
காய்கறிச் சந்தை போல
கூவி கூவி
களவாணிகள் விற்கிறார்கள்
கலைவாணியை!

1 கருத்து:

ramalingam சொன்னது…

அப்ப இத்தனை நாளாய் எத்தனை கொள்ளை அடித்திருப்பார்கள் இந்த நாய்கள். பாரதி இருந்திருந்தால் அறம் பாடி இருப்பான். இவர்களிடம் படித்தால் குழந்தைகள் எங்கே உருப்படப் போகிறது.