ஞாயிறு, 26 ஜூன், 2011

உப்பு


வாங்கியக் கடனை
உரிய தேதியில்
செலுத்த முடியாதவனைப் பார்த்து
“சோத்துல உப்புப்போட்டுத்தான் சாப்பிடுறீயா“
என ஏசும் கந்துவட்டிக்காரர்.

திருமண வயது கடந்தும்
திருமணமாகாமல்
வீட்டில் அடைந்து கிடக்கும்
மகள்களைப் பார்த்து
புழுங்கியவாறு புருஷனை
“ உப்புக்கல்லுக்குப் பெறாதவன்“
ஏன ஏசும் மனைவி.


“உப்பு போட்டு சாப்பிடுறவனா இருந்தா“
நன்றியை மறந்திடாதே என
செய்ததைச் சொல்லிக் காட்டும் நண்பன்.

உப்பில்லா பண்டம்
குப்பையிலே என்பதெல்லாம் மாறி
மானம் சார்ந்த
மதிப்பீடாய் மாறியிருக்கிறது உப்பு.

நன்றிக்கு
அடையாளமான
நாய்க்குப் பிறகு
உப்பே நினைத்துப் பார்க்கப்படுகிறது.

மூடிய கடைகளின் வாசல்களில்
வைக்கப்பட்டிருந்த
உப்பு மூட்டைகள்
இப்போதெல்லாம்
கடைகளுக்குள் தான் இருக்கின்றன.
மனிதர்களின் மீதான
நம்பிக்கையையும்
தகர்த்து விட்ட உப்புக்கல்.

அதை கூவி விற்கும் உப்புக்காரனின்
தெப்பலான தேகத்தில்
ஒட்டிக்கிடக்கும் உப்பு
ஒருவகையில்
உழைப்பின் அடையாளமாகத் தான் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: