தன்மானத்துடன் வாழப்பார் என வேலைக்குச் செல்லாமல் ஊரைச்சுற்றும் மகனைப் பார்த்து தந்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். ஆனால், சமுதாயம் நலனுடன் இருக்க தன்மானத்தை விற்காதே எனக்கூறும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு போடும் அளவிற்கு அரசியல் தடுமாற்றம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்திராகாந்தி 1975 ஆம் ஆண்டு அவசர நிலையைக் கொண்டு வந்த போது நாடு முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகள். காங்கிரஸ் காலிகளாலும், காக்கிளாலும் வேட்டையாடப்பட்டனர். தமிழகத்தில் இதில் திமுகவினரும் தப்பவில்லை. பல ஆண்டு சிறைவாசம், சித்திரவதைகளை கம்யூனிஸ்டுகள் அனுபவித்ததைப் போல திமுகவினர் பலரும் அனுபவித்தனர். ஆனால், சிலஆண்டுகளிலேயே அதையெல்லாம் மறந்து, "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சியைத் தருக!" அவர்கள் மாறிப்போனார்கள். அவசர நிலை எனும் இருளைக்கிழித்துப் பிறந்த இயக்கங்கள் இன்னும் அந்த வடுக்களை மறக்காமல் உள்ளன. இன்று துணை முதல்வராக இருக்கிற மு.க.ஸ்டாலின், இந்திராகாந்தியின் அடக்குமுறையால் சிறைக்குள் சித்வதைக்குள்ளானார். கடுமையான தாக்குதலுக்குள்ளானார். சாத்தூர்பாலகிருஷ்ணன். சிட்டிபாபு ஆகியோரை காங்கிசுக்கு பலி ஈந்தது திமுக.
1975 ஆம் ஆண்டு நடந்தவற்றை மறந்து விட்டு இன்று அதே காங்கிரஸ் கட்சிக்காரர்களின் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு மு.க.ஸ்டாலின் வாக்கு கேட்டுவரும் போது, சாத்தூர் பாலகிருஷ்ணனும், சிட்டிபாவும் நம் கண் முன் வந்து போகிறார்கள். இன்று திமுகவினர் பலர் மிசா என்ற அடைமொழியைப் போட்டுக் கொண்டு போஸ்டர் அடிப்பதற்கு காரணமாயிருந்த காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த அவரச நிலையை, பக்கா திமுக யாரும் மறக்கவில்லை. ஆனால், சொக்கா திமுக மறந்து விட்டது.
சரி, விஷயத்திற்கு வருவோம். காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த அவசர நிலை தற்போது தமிழகத்தில் இருக்கிறதா? நாளிதழ்களில் செய்தி வெளியிட தடையுள்ளதா? 144 தடை உத்தரவுகள் உள்ளதா? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்களா? ஆனால், இதில் எதுவுமே நடைபெறாத போது, திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி, அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழகத்தில் உள்ளது என கூறியுள்ளார். அவருடைய புதல்வர் மிசா, மு.க.ஸ்டாலினும் இதே கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் நியாயமான நடவடிக்கைகள், நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகள் திமுகவிற்கு அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. ஆணையத்தின் செயல்பாடுகளின் காரணமாக வாகனச்சோதனையில் வருமானவரி கட்டாத பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு இழப்பு ஏற்படுத்த காரணமான வணிகர்கள், கொழுத்த பணக்காரர்கள் ஆகியோர் பலர் பணத்தைப் போட்டு விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். பத்து ரூபாயை பத்திரமாக பர்சுக்குள் வைத்திருக்கும் இன்றைய சூழலில், 5 கோடி ரூபாயை பேருந்தின் மேற்கூரையில் போட்டு அனுப்பும் நிலைக்கு ஆளும் அரசியல்வாதிகளின் நிலை உயர்ந்துள்ளது. மாறியுள்ளது. அவர்களும் சொல்கிறார்கள். இது அறிவிக்கப்படாத அவரசநிலை என்று.
இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக மதுரையில் ஆட்சியராக இருக்கும் உ.சகாயம், ஏற்கனவே, நாமக்கல்லில் பணிபுரியும் போது மக்கள் ஆட்சியர் எனப்பாராட்டப் பட்டவராவார். அவரை மதுரையில் இருந்து மாற்ற வேண்டும் என்ற தாக்கீதை மாறி, மாறி ஆளுங்கட்சி நீதிமன்றங்களிடம் நீட்டிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு மனு ஏப்-11 ந்தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் ஜனநாயகத்திற்கு விரோதமாக என்ன தான் பேசுகிறார்? இதோ அவர் ஏப்-11 ந்தேதி மதுரை காந்திமியூசியம் முன்பு பேசிய பேச்சைக் கேளுங்கள் . . .
"நாம் சட்டமன்றத் தேர்தல் இறுதிகட்டத்தில் உள்ளோம். நாளை மறுநாள்(ஏப்-13) தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் வழக்கம் போல என்பதை விட வழக்கத்தை விட இந்த தேர்தலை சுதந்திரமாகவும் , நேர்மையாகவும் நடத்த விரும்பியது. அதற்காக பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அதை மதுரை மாவட்டத்தில் முழுமையான அளவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரதநாடு என பாரதி பாடிய இந்தியா எல்லா நாட்டையும் விட பெருமைமிக்க நாடாகும். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சிறப்பு உள்ளது. உலகத்தில் முதல் பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்கியது சோவியத் ரஷ்யா ஆகும். உலகத்தின் பொருளாதார வலிமை பெற்ற நாடாக அமெரிக்கா கூறப்படுகிறது.அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, கலாச்சாரம் போற்றும் நாடாகத் திகழ்கிறது. அனைத்து நாடுகளையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வர இங்கிலாந்து நினைத்தது. ஆனாலும், நமது பாரதநாடு உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகத்திகழ்கிறது. இந்த ஜனநாயத்தின் அடித்தளம் தேர்தல் தான். மிகநேர்மையாகவும், மிக நியாயமாகவும் தேர்தல் நடைபெறுவது தான் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். எப்பாடு பட்டாவது தேர்தலை மிகநேர்மையாகவும், மிக நியாயமாகவும் நடத்துவோம் என இந்திய தேர்தல் ஆணையம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதை அமல்படுத்த நானும், தேர்தல் அலுவலர்களும், காவல்துறை நண்பர்களும் இரவு, பகல் பாராது முயற்சி செய்து வருகிறோம். நேற்று ஒரு இடத்தில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது எனக்கிடைத்த தகவலை அடுத்து விசாரிக்கச் சென்று நாங்கள் திரும்பியது போது காலை 4 மணியாகும். ஜனநாயகத்தின் பெருமையை உயர்த்த வேண்டுமானால் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்.
நான் மதுரை மாவட்ட வாக்காளர்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்று தான். எவருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால், கவருக்கு வாக்களிக்காதீர்கள். சன்மானம் பெற்று வாக்களிப்பது நமது தன்மானத்தை விற்கும் செயலாகும். பணநாயகமா, ஜனநாயகமா என்றால் ஜனநாயகம் தான் வெற்றிப்பெற வேண்டும் என்பது தான் தேர்தல் ஆணையத்தின் நோக்கம். யாரிடமும் லஞ்சம்,பரிசுப்பொருட்கள் வாங்காமல் யாரை விரும்புகிறோமோ அவர்களுக்கு வாக்களியுங்கள். 100 சதவீத வாக்காளர்கள் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதை அளவு 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் எந்த மாவட்டமும் இதை நிரூபிக்கிறதோ இல்லையோ, மதுரை மாவட்டத்தில் தேர்தல் மிகநேர்மையாகவும், மிக நியாயமாகவும் தேர்தல் நடத்தப்படும். நேர்மையானவர்களால் தான் நேர்மையான சமுதாயத்தை உருவாக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள். பணத்திற்காக ஓட்டு தேசநலனுக்கான வேட்டு. ஜனநாயகம் என்ற விதையை விதைக்க நினைக்கிறோம். லஞ்சம் ஜனநாயகத்தைக் ஆழக்குழிதோண்டிப் புதைத்து விடும். ஜனநாயகத்தை விதைக்கப்போகிறோமா, இல்லையென்றால் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்போகிறோமா என்ற கேள்வி தான் உங்கள் முன் உள்ளது. ஒரு இடத்தில் சிலர் பணம்கொடுப்பதாக கூறினார்கள். அலுவலர்கள் அங்கு சென்ற போது அப்பணத்தைக் கொடுத்தவர்கள், உண்டியலில் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். இதனால் அலுவலர்கள் திரும்பி விட்டார்கள். மூன்று மணிநேரத்திற்குப் பின் அந்த உண்டியலையும் காணவில்லை. இது பணம் படுத்தும் பாடு. மக்கள் மிக மிக நேர்மையானவர்கள் " என்று பேசியுள்ளார்.
இந்திய ஜனநாயகத்தினைப் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவரை மதுரையில் இருந்து மாற்ற வேண்டும் என்ற ஆளுங்கட்சியின் குரல் மக்கள் மன்றத்தில் எடுபடாது. ஏனெனில் மதுரை மக்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்கள். அதாவது மதுரை ஆட்சியர் உ.சகாயத்தை மதிக்கிறார்கள்.

1 கருத்து:
நல்ல பதிவு! கலெக்டர் பேச்சை சூட்டோடு சூடாக கொடுத்துவிட்டீர்களே?
கருத்துரையிடுக