சிரட்டை மட்டையை
கையில் பிடித்து
தேனீர்
குடித்துப் பழக்கப்பட்டவனுக்கு
மட்டும் தெரியும்
தன்மானத்தின் சூடு.
சொந்த ஊர் வந்தவுடன்
கழட்டிய செருப்புகளை
கக்கத்தில்
சுமப்பவனுக்கு
மட்டுமே தெரியும்
கடக்கப்போகும்
தூரத்தின் வலி.
மயானக்கொல்லைக்கு
இப்படிச்செல்லாதே என
ஆற்று நீருக்குள்
விரட்டப்படுவனுக்கு
மட்டுமே தெரியும்
பாடையின் கனத்தை விட
ஆதிக்கவாதிகளின் திமிரின் எடை,
எல்லோருக்குமான
ஆலயத்திற்குள்
இடமில்லையென்ற
கட்டளைகளைக் கேட்டவர்களுக்கு
மட்டும் தெரியும்
செவிடாய் இருக்கும் சாமி
செவிட்டுச்சாமி என்று.
ஐந்து முறைகளாக
கழட்டிப் போடப்பட்ட
உள்ளாடைகளுக்குப் பதில்
புதியதை அணிய நினைப்பவருக்கு
வலியை
எடையை
கேவலத்தைச் சுமப்பவர்கள்
இப்போது
இயேசு கிறிஸ்துவாய்
தெரியக்கூடும்.
அவர்களுக்குத் தெரியும்
யூதாஸ் யாரென்று. . .
1 கருத்து:
கடைசி பத்தி பிரமாதம்
கருத்துரையிடுக