ஞாயிறு, 12 டிசம்பர், 2010

பல ஆயிரம் கோடி ரூபாய் அரசு சொத்தை தனியாருக்கு தாரைவார்க்க நடக்கும் முயற்சி: ஆதாரங்களுடன் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்




த்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா, பெண் தரகருக்கு குறி என்ற செய்திகளுக்குப் பின்னால் இருப்பது அரசுக்கு வரவேண்டிய நிதி என்பது வேறு திசைக்கு திருப்பி விடப்பட்டது என்பது தான்.
தமிழகத்தில் அப்படிப்பட்ட வேலையில் அரசே ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளது. அரசின் சொத்து என்பது பொதுமக்களால்  செலுத்தும் வரிகளால் கிடைப்பதாகும். ஆகவே, அது மக்கள் சொத்து. அப்படிப்பட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் சொத்தை தனியாருக்கு தருவதற்கான வேலைகளை தமிழக அரசு மிகவேகமாக செய்து வருகிறது. இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் என பல தரப்பினர் போராட்டக்கொடியை ஏந்தி தெருவிற்கு வந்துவிட்டனர்.
அரசு உதவி பெறும் இரண்டு கல்விநிறுவனங்களை தனியார் பல்கலைக்கழகமாக்கும் முடிவுக்குப் பின்னால் தான் இந்தப்பிரச்சனை துவங்கியுள்ளது. கோவையில் உள்ள பிஎஸ்ஜி குழுவின் கல்வி நிறுவனங்களையும், மதுரை தியாகராஜர் குழுவின் கல்வி நிறுவனங்களையும் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான சட்டமுன்வடிவுகளை எவ்வித முன்னறவிப்புமின்றி இரகசியமாக சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக அரசு உதவி பெற்று நடைபெற்று வந்த கல்வி நிறுவனங்கள் தனியார் பல்கலைக்கழகமாக மாற்றுவதில் என்ன சிக்கல் எனக் கேட்கக்கூடும்! அரசு உதவி மட்டுமா இக்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகிறது.
மதுரையில் உள்ள தியாகராஜர் கல்வி நிறுவனத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு 50 கோடி ரூபாய் வரை கைமாறியுள்ளதாக புகார்கள் புகையாக கிளம்புகிறது. இதுகுறித்து முதலில் விசாரணையைத் துவக்கினோம்.
தியாகராஜர் கல்லூரிகளின் நிலம்
தியாகராஜர் கலைக்கல்லூரியின் பெரும்பான்மையான இடம்“ சேவை அடிப்படையிலான கல்வி“ என்ற பொது நோக்கத்திற்காக, அரசால் மிகக்குறைந்த விலையில் கையகப்படுத்தி வழங்கப்பட்ட நிலங்களாகும். மேலும், இராமநாதபுரம சேதுபதி மன்னரால் தானமாக அல்லது கல்விச்சேவைக்காக மிகமிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டதும், வைகை ஆற்றுப்படுகையான அரசுப்புறம் போக்கு நிலங்களாகும்.
தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் பெரும்பான்மையான இடம் அரசு புறம்போக்கு நிலங்களும், ஏழை மற்றும் சிறு-குறு விவசாயிகளிடமிடருந்து,“சேவை அடிப்படையிலான கல்வி“ என்ற பொது நோக்கத்திற்காக, அரசால் மிகக்குறைந்த விலையில் கையகப்படுத்தி வழங்கப்பட்ட நிலங்கள் மற்றும் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் ஆசிரமத்தால் தானமாக வழங்கப்பட்டதும், அரசுப்புறம்போக்கு நிலங்களுமாகும். சான்றாக தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் விருந்தினர் விடுதி,அவனியாபுரம் சர்வே எண் 673-ல் அரசுப்புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டதாகும்.
தியாகராஜர் கல்லூரிகளின் கட்டிடங்கள்
தியாகராஜர் கலைக்கல்லூரியின் முகப்பு கட்டிடமான மெயின் பிளாக், இராமநாதபுரம் சேதுபதி மன்னரால் நிலத்தோடு சேர்த்து தானமாக அல்லது கல்விச்சேலைக்காக மிகக்குறைந்த விலையில் கொடுக்கப்பட்டது. பிற கட்டிடங்கள் அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின்(யூஜிசி) நிதியுதவி பெற்று கட்டப்பட்டவை. சான்றாக, கடந்த 2007-ல் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாணவியர் விடுதிக்கு 12.5 லட்ச ரூபாயை யூஜிசி மானியமாக கொடுத்துள்ளது.
தியாகராஜர் பொறியயல் கல்லூரியைப் பொறுத்தவரை 31.3.2005 ல் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி கட்டிடங்களுக்காகப் பெற்றுள்ள மானியம் 1 கோடியே 12 லட்சத்து 27 ஆயிரத்து 827 ரூபாய் 64 பைசாவாகும். இப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் 25 ஆண்டுகளுக்கு முன்பே கட்டிமுடிக்கப்பட்டது என்பதால் அவற்றின் இன்றைய மதிப்பு பல கோடிகளாகும். கல்லூரி துவக்கப்பட்ட காலத்தில் 21.11.1957 ல் கட்டிடங்களுக்காக ரூ.7.41 லட்சத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தற்போது 2008 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட உள்விளையாட்டரங்கத்திற்கு கூட 25 லட்ச ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆடவர் விடுதியின் ஏ பிளாக், பி பிளாக் மற்றும் சி பிளாக் ஆகிய முதல் மூன்று  கட்டிடத் தொகுதிகளைக் கட்டுவதற்காக முழுத்தொகையையும் 22.4.71 ஆம் ஆண்டு 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை வட்டியில்லாமல் 33 ஆண்டுத்தவணைக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் தற்போது கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியின் புதிய தொகுதிக்கு, விடுதி மாணவர்களிடமிருந்து தலா 3 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இக்கல்லூரிகளின் கட்டிடங்கள் அனைத்தும் மக்கள் சொத்து மட்டுமல்ல அரசு சொத்தாகும்.
தியாகராஜர் கல்லூரிகளுக்கு ஆதாரமான அரசு நிதி
 கடந்த 60 ஆண்டுகளாக தியாகராஜர் கலைக்கல்லூரிக்கு மாநில அரசும், மத்திய அரசின் யூஜிசியும் கல்லூரியின்  உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய்களை வழங்கியுள்ளது. தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு அரசு நிதியை வழங்கும் அரசுத்துறை விபரங்கள் வருமாறு: தொழில்நுட்பக்கல்வித்துறை மூலம் வருடந்தோறும் வழங்கப்படும் நிதி, சிறப்பு ஒதுக்கீடு நிதி, மத்திய அரசின் நிதிநல்கைக் குழுக்களான ஏஐசிடிஇ, யூஜிசி, டிஆர்டிஓ, பிஆர்என்எஸ் ஆகியன ஆண்டு தோறும் பல கோடிகளை இக்கல்லூரிக்கு வழங்கி வருகின்றன. ஆனால், இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் கடந்த 25 ஆண்டுகளாக நிர்வாகம் செலவளித்தாகக் கூறுவது 30.78 கோடி ரூபாய் தான்.
 அதே நேரத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தோட்ட பராமரிப்புத் துவங்கி கட்டிடம், மின்கட்டணம், எழுதுபொருள் போன்ற கல்லூரியின் அன்றாட இயக்கத்திற்கான அனைத்துவிதமான செலவுகளுக்கும் மற்றும் ஆசிரியர், அலுவலர் ஊதியத்திற்குமாக கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2007-2008 வரையிலான 9 ஆண்டுகளுக்கு மட்டும் மாநில அரசு தந்துள்ள பணம் 30 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரத்து 950 ரூபாயாகும். மாநில அரசு உபகரணங்களுக்காகக் கொடுத்துள்ள நிதியையும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் மூலம் உபகரணங்களுக்காக கொடுக்கப்பட்ட நிதியையும் மேற்சொன்ன கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 25 ஆண்டுகளாக நிர்வாகம் தான் செலவளித்துள்ளதாகக் கூறும் ரூ.30.78 கோடியானது கடந்த 13 ஆண்டுளாக சுயநிதிப்பிரிவு மாணவர்களிடமிருந்து வசூலித்துள்ள கட்டணங்களில் மிகச்சிறிய ஒருபகுதியேயாகும். கடந்த 2003-2004 ஆம் நிதியாண்டில் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணம் 6 கோடியே 14 லட்சத்து 53 ஆயிரத்து 443 ரூபாயாகும். அதே போல 2003-2004 ஆம் ஆண்டிலிருந்து 2007-2008 ஆம் வரையிலான 5 ஆண்டுகளில் மட்டும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணம் 30 கோடியே 70 லட்சம் ரூபாயாகும்.
கடந்த 2003-2004 ஆம் நிதியாண்டில் கல்லூரிக்கு டிரஸ்ட் வழங்கியதாகக்கூறும் நிதி 33.33 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம், மாநில அரசு வழங்கிய நிதி ரூ. 2 கோடியே 98 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் மத்திய அரசின் ஏஐசிடிஇ நிதி ரூ.1 கோடியே 58 லட்சத்து 6 ஆயிரத்து 997 உட்பட 2003-2004 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிதியாண்டில் மட்டும் அரசுநிதி ரூ. 4 கோடியே 56 லட்சத்து 997 ஆகும். இதில் ஏஐசிடிஇ தவிர மத்திய அரசின் பிற துறைகளின் நிதி சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கடந்த 50 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கப்பட்டுள்ள பணத்தின் இன்றைய மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாயாகும். இக்கல்லூரிகளின் 99 சதவீதத்திற்கும் மேலான நிதி ஆதாரம் அரசு நிதியான மக்கள் வரிப்பணம் தான். இந்தப்பணத்தை தனியாருக்கு தாரை வார்க்க தமிழக அரசு முயற்சி செய்வதற்குப் பின்னால் இருப்பது என்ன என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு இதே முயற்சியில் தமிழக அரசு முயன்ற போது திமுகவைத் தவிர அனைத்துக்கட்சிகளும் இம்முடிவை எதிர்த்தன. தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அப்போது முதல்வர் கருணாநிதி, கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக்குழுவிற்கு எழுதிய கடிதத்தில்,“ கல்லூரி ஆசிரியர்களையோ, மாணவர்களையோ பாதிக்கும் எத்தகைய முடிவையும் இந்த அரசைப் பொறுத்தவரையில் மேற்கொள்ளாது“ எனக்குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது, மீண்டும் ஆசிரியர், மாணவர் பாதிக்கும் முடிவை அவர் மேற்கொள்ளத் துண்டியது எது என அறியக்காத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.




கருத்துகள் இல்லை: