சனி, 11 டிசம்பர், 2010

புதிய போதையின் பிடியில் மாணவர்கள்:மதுரையில் பரவும் புதிய கலாச்சாரம்

மதுரையில் புதிய போதைப்பழக்கத்திற்கு ஏராளமான மாணவர்கள் அடிமையாகும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீதிதோறும் பாடசாலைகள் இருக்கிறதோ, தமிழக அரசின் புண்ணியத்தால் டாஸ்மாக் மதுபானக்கடைகள் இருக்கிறது. பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்பதை மீறி ஏராளமான கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழக அரசிற்கு ஏராளமான வருமானம் கிடைப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி அது கவலைப்படுவதேயில்லை.

பள்ளிச் சீருடைகளுடன் அரசு மதுபானக்கடைகள் ஏராளமான சிறுவர்களை அன்றாம் காணமுடிகிறது. இந்த வயதினருக்குத்தான் மதுபானங்களை வினியோகம் செய்ய வேண்டும் என்ற விதி மற்ற மாநிலங்களில் இருந்தாலும், தமிழகத்தில் அப்படிப்பட்ட விதிகள் இல்லாததால், விளையும் பயிர்கள் பிஞ்சிலேயே வெம்பி விடுகின்றன.

மது, பான்பராக் போன்ற போதை பொருட்களை உட்கொண்டிருந்த மாணவ சமுதாயத்தினர் மதுரையில் புதுவித போதை பழக்கத்திற்கு சமீபகாலத்தில் அதிகமாக அடிமையாகி வருகின்றனர். மதுரை அனுப்பானடி கிழக்குத் தெருவைச் சேர்ந்த ஒரு பெண்மணி சமீபத்தில் தனது மகன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளான் எனக்கூறியதுடன், அவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டுள்ளார்.

அவருடைய மகன் சௌராஷ்டிர ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடன் திருஞானம் பள்ளி உள்ளிட்ட தெப்பக்குளத்தைச் சுற்றி உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 13 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து இந்த போதை பழக்கதிற்கு அடிமையாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இருமல் மருந்து பாட்டிலை முழுமையாக வாங்கி குடித்து மயங்கி கிடப்பது, சைக்கிள் டியூப்பிற்கு பஞ்சர் ஒட்டும் சொல்சனை தீயில் வாட்டி போதை கொள்வது என்ற நிலையில் இருந்து தற்போது, "பெவிகுயிக்" எனும் டியூப்பில் இருந்து புதிய போதையைக் கண்டுபிடித்துள்ளனர். உடைந்து போன பொருட்களை ஒட்ட பயன்படும் பெவிகுயிக் டியூப்பை வாங்கி, தண்ணீர் பாக்கெட்டில் உள்ள தண்ணீரை வெளியேற்றி விட்டு அதில் டியூப் மருந்து உள்ளே செலுத்தி சிறிது நேரம் அதை குலுக்குகின்றனர். ஆவியாக திரவம் வெளியேறும் போது, அதை வாயில் வைத்து உட்கொள்ளும் போதைத்தன்மைக்கு தான் தற்போது மதுரை மாணவர்கள் அடிமையாகி உள்ளனர்.

அனுப்பானடியைச் சேர்ந்த அந்த சிறுவன், போதையால் தனது தாயின் முகத்தில் தலையணை வைத்து அமுக்கி கொல்ல முயன்றுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமுதா அக்ஷயா டிரஸ்ட் நிர்வாகி ஜெ. அமுதா லெட்சுமி கூறுகையில், இதுவரை போதை பழக்கத்திற்கு அடிமையான பலருக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளேன். முதல் முறையாக மதுரையில் ஒரு பள்ளிச்சிறுவன் இப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதை நினைத்தால் வேதனையாக உள்ளது. கடந்த 6 மாதங்களாக இப்பழக்கத்திற்கு இச்சிறுவன் ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் 21 நாட்கள் இச்சிறுவனுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. மதுரையில் பள்ளிகள் அருகே விற்கப்படும் இந்த டியூப்பின் விலை வெறும் 20 ரூபாய் தான்.ஆனால், 40 ரூபாய்க்கு மாணவர்களிடம் விற்பனை செய்கிறார்கள் என்ற அதிர்ச்சித்தகவலை நம்மிடம் கூறினார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜீடம் இதுகுறித்து கேட்டதற்கு, மாணவர்கள் இப்படிப்பட்ட போதை பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவது அவர்களது உடல்நலத்திற்கு மட்டுமின்றி சமூகநலனுக்கு உகந்ததாக இருக்கும். அத்துடன் தெப்பக்குளம், காமராஜர் சாலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் உடனடியாக விழிப்புணர்வு நிகழ்வை நடத்தப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் போதை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை விரிவான அளவில் எடுத்துச் செல்லப்படும். இதற்காக விளம்பரப்பலகைகள் உடனடியாக வைக்கப்படும் என்றும் கூறினார்.

2 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

ப.கவிதா குமார் சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி பிரபாகரன்