செவ்வாய், 16 நவம்பர், 2010

அதிகரிக்கும் பெண்கள், குழந்தைகள் கடத்தல்

சமீபகாலத்தில் பள்ளிக்குழந்தைகள் கடத்தல், கொலை என்ற செய்திகள் சர்வசாதாரணமாகி விட்டது. கடுமையான சட்டங்கள் இருந்தாலும் குற்ற நடவடிக்கைகள் என்பது குறைந்தபாடில்லை என்பதற்கு, குற்றவாளிகளுக்கு காவல்துறையும், ஆளுங்கட்சியும் துணை போகிறது என்ற குற்றச்சாட்டை புறக்கணித்து விட முடியாது.
கோவையில் இரு பள்ளிக்குழந்தைகள் கடத்தி, கொடூரமான முறயில் கொல்லப்பட்டுள்ளது பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தில் 11 வயது பெண் குழந்தையை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளது என்பது கொடுமையான செய்தியாகும்.
ஆயுள்தண்டனை என்கிறது சட்டம்
போதைப்பொருட்கள் கடத்தல், ஆயுதக்கடத்தலுக்கு அடுத்தப்படியாக உலகத்தில் லாபகரமான தொழிலாக குழந்தைகள் கடத்தல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 35 லட்சம் குழந்தைகள் உலகம் முழுவதும் கடத்தப்படுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் குழந்தைகள், பெண்கள், சிறுமிகள் கடத்தல் என்பது அதிகரித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு 1097 பேரும், 2008-ஆம் ஆண்டு 1155 பேரும்,2009-ஆம் ஆண்டு 1133 பேரும் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தனது புள்ளிவிபரத்தில் கூறுகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு தமிழகத்தில் 1692 பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை இணையத்தளம் தெரிவிக்கிறது.
‘வன்புணர்ச்சிக்கான தண்டனை’ குறித்துக் கூறும் பிரிவு 376 ஆனது, வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணானவர், அதைச்செய்தவரின் சொந்த மனைவியாகவும், 12 வயதிற்கும் கீழ்படாதவராகவும் இருந்தால், அதில் ஈடுபட்ட எவருக்கும் 2 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் அபராதமும் மட்டுமே விதிக்கப்படும் என்று கூறுகிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கூறுகிறது. தமிழகத்தில் வன்புணர்ச்சி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேருக்கு தமிழக அரசு ஆயுள் தண்டனை விதித்துள்ளது?
பணம் கொடுத்து மீட்கும் அவலம்
நம் நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்களில் 25 சதவீதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள்; சிறுவர்கள். குடும்ப வறுமையால் இத்தொழிலில் ஈடுபடும் அல்லது ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் அதிகம் பேர் உண்டு. இவர்களுக்கு இணையாக, கடத்தப்பட்ட குழந்தைகளும் உள்ளனர் என்கிறது அந்த கணக்கெடுப்பு. பிச்சை எடுக்க, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த, உடல் உறுப்புகளுக்காக, பாலியல் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பெண் சிசுக்கொலை, பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுவது என அதிகம் பாதிக்கப்படுவது பெண் சமுதாயம். இதனால், ஆண்-பெண் விகிதங்களில் ஏற்படும் மாற்றம், சமுதாயத்தின் போக்கை ஏற்கெனவே மாற்றியமைக்கத் தொடங்கிவிட்டது.
தமிழக மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் குழந்தைகள். இவர்களில் தினசரி நூற்றுக் கணக்கானோர் காணாமல்போவதாக புகார் வருகிறது. இவர்களில் பலர் திரும்பக் கிடைப்பதே இல்லை எனக் தமிழக அரசின் "மிஸ்ஸிங் சைல்டு பீரோ' அமைப்பு கூறியுள்ளது. இவற்றைக் கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையே, குழந்தையைத் திருடியவர்களுக்கு பணம் கொடுக்கும் அவலம் தமிழகத்தில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றுள்ளது.
குழந்தைகளை தத்து எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தத்து எடுப்பு மையங்களில் இருந்து குழந்தைகள் விற்பனை என்பது கனஜோராக நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை தத்து எடுப்பு மையங்கள் உள்ளன. அவற்றில் எத்தனை குழந்தைகள் வந்து சேர்ந்துள்ளன. அவை முறையாக தத்து கொடுக்கப்படுகிறதா என்ற கேள்விகளை அரசின் முன் வைக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும்.
மூன்றாண்டுகளில் 3385 பேர் கடத்தல்
பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக்குழு மாவட்டந்தோறும் முறையாக செயல்பட்டாலே குழந்தைகள், பெண்கள் கடத்தப்படுவது குறையும். ஆனால், தமிழக முதல்வர் கருணாநிதி, கடந்த4.11.2010 அன்று முரசொலியில் எழுதியுள்ள உடன்பிறப்புகளுக்கான கடிதத்தில்.“ பொருளாதார, சமூக மாற்றங்களும், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் மிகவேகமாக ஏற்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையின் காரணமாக, புதிய,புதிய முறையில் பல்வேறு குற்ற நிகழ்வுகள் நடக்கின்றன“ என்று குறிப்பிட்டதுடன் எவ்வளவு குற்ற நடவடிக்கைகளை தமிழக காவல்துறை கண்டுபிடித்துள்ளது என பட்டியலிட்டுள்ளார். அதில் பெண்கள், குழந்தைகள் கடத்தல் எவ்வளவு கண்டுபிடிக்கப்பட்டது என்ற விபரம் எதுவும் இல்லை. 2007-ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை 3385 பேர் கடத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை இணையதளம் கூறுகிறது. இவர்களில் எத்தனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுத்தல் பற்றிய ஒரு நாள் பயிலரங்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் தமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெற்றது. இதில் பேசிய நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக குற்றவியல் மற்றும் குற்ற நீதியியல் துறைத்தலைவர் மாதவ சோமசுந்தரம்,“ பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தல் தடுப்புக்கு என்று தனியாக இந்திய நாட்டில் சட்டம் இல்லை. இதனால் இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவோர் மீது மிக கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. விளம்பரங்களில் வேலைக்கு பெண்கள் தேவை, துபாயில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்று பல்வேறு விளம்பரங்கள் செய்யப்படுகிறது. விளம்பரங்கள் செய்யப்படுவது எல்லாம் போலி கிடையாது. 100 விளம்பரங்களில் 10 முதல் 20 விளம்பரங்கள் போலியாக கொடுக்கப்பட்டு ஆட்களை தேர்வு செய்வதாக கூறுகின்றனர். அவர்களின் மாய வலையில் பெண்கள், குழந்தைகள் சிக்கிவிடுவதால் அவர்கள் கடத்தப்படுகின்றனர். இதனால் விளம்பரங்களை பார்த்து ஏமாந்து விடாமல் அது குறித்து நல்ல விசாரணை செய்த பிறகு தான் அதில் சேர வேண்டும் என்கிற எண்ணங்களை பெண்கள், குழந்தைகள் மனதில் ஆழமாக பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்“ என அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
விபச்சாரத்தொழிலுக்காக கடத்தல்
ஆனால், சுமங்கலி திட்டத்திற்கு பெண்கள் தேர்வு என்ற பெயரில் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தனி அலுவலகமே நடத்துகின்றனர். இப்படிப்பட்ட விளம்பரங்களை கண்டு ஏமாறும் பெண்கள் பலர், வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறார்கள். இதுதவிர செவிலியர் பணி, வீட்டுவேலை என பல பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதாக கூறும் நிறுவனங்கள் பெரிய நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் முளைத்து விட்டன. இவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத வரை பெண் கடத்தல் தடுக்கமுடியாது.
கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய அரசு இந்தியாவில் எவ்வளவு பெண்கள், குழந்தைகள் கடத்தல் இருக்கிறது என்கிற சர்வே ஒன்றை எடுத்தது. இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களை தேர்வு செய்து இந்த சர்வே எடுக்கப்பட்டது. இந்த சர்வே அறிக்கையில் 38 சதவீதம் பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதாக கண்டறியப்பட்டது. . இந்தியாவில் இருந்து பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதை போன்று வெளிநாட்டில் இருந்தும் பெண்கள் இந்தியாவிற்கு கடத்திவரப்படுகின்றனர். தாய்லாந்து, நேபாளம், பர்மா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் பெண்கள், குழந்தைகள் இந்தியாவிற்கு கடத்தி வரப்படுகின்றனர். இவர்கள் அதிகமாக விபச்சார தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தமிழகத்தில் ஒருசில லட்சம் ரூபாய்க்காக விற்கபட்ட சிறுமிகள், ஆயுள் முழுக்க விபசார கும்பலிடம் அடிமை வாழ்க்கை வாழ்ந்து தங்கள் வாழ்க்கையையே தொலைத்து விடுகிறார்கள். அங்கே, நாள்முழுக்க விபசாரம் செய்து, விபசார தாதாக்களுக்கு பணம் சம்பாதித்துக் கொடுப்பதுதான் இவர்களது வேலை. அவர்களுக்கு கிடைக்கும் கூலியோ மாதத்திற்கு சில ஆயிரங்கள் தான். எவ்வளவோ விழிப்புணர்வு இருந்தும் கூடிய விரைவிலேயே எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய் தாக்குதலுக்கும் இவர்கள் ஆளாகி விடுகிறார்கள். ஆபாச படம் எடுப்பதற்காகவும் சிறுமிகள் கடத்தபடுகிறார்கள்.
இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் ஒருபுறம் நடக்க… மறுபுறம் அந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இன்னும் வேகமாக அதிகரித்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 53 சதவீதத்தினர் பாலியல் கொடுமைகளை சந்தித்தவர்கள் என்கிற ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பின் தகவலே அதற்கு சான்றாக உள்ளது. மேலும், நாட்டில் உள்ள 28 லட்சம் பாலியல் பெண் தொழிலாளர்களில் 25 சதவீதம்பேர் கடத்தபட்டு வந்தவர்களே என்று அதிர வைக்கிறது இன்னொரு கணக்கெடுப்பு. காணாமல் போகும் குழந்தைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை.
காவல்துறையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டாலும், காணாமல் போனவர்களைத் தேடுவதற்கு குழுக்களை அமைப்பதன் மூலம் பள்ளிக்குழந்தைகள் மட்டுமின்றி பெண்கள் கடத்தலையும் தடுக்கமுடியும், அதன் குற்றச்சம்பவங்களைக் குறைக்க முடியும். அதற்கு பெற்றோர்களும் குழந்தைகளின் மீது கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

3 கருத்துகள்:

sivakumar சொன்னது…

சிறப்பான பதிவு! மிகவும் கவ்லையளிக்கும் செய்தி. குழந்தைகள் கடத்தப்படுவதும் விபச்சாரத்துக்குப் பயன்படுத்துவதும் கொடுமையான் நிகழ்வுகள். ஒருபுறம் வறுமையின் காரணமாக அவர்களே விபச்சாரத்தை தேர்ந்தெடுக்கும் அவலமும் மறுபுறம் குழந்தைகள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு சீரழிக்கப்படுவதும் அவமானம்

Unknown சொன்னது…

சமூக பார்வையுள்ள பதிவு. பாராட்டுக்கள்..


நாங்களும் இது பற்றி பதிவிட்டுள்ளோம். எங்கள் பதிவிலிருந்திலிருந்து...



//ஆள் கடத்தல், இன்று குழந்தைகள் கடத்தல் என உரு மாறி,இதற்கு பாலியல் பலாத்கார பின் புலமும் சேர்ந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.//

http://bharathbharathi.blogspot.com/2010/11/blog-post_02.html

நேரமிருப்பின் வந்துப் பார்க்கவும்..

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு வாழ்த்துக்கள் கவிதா
அன்புடன்
முத்துக்கண்ணன்