செவ்வாய், 30 நவம்பர், 2010

2 ஜி பேருந்தில் துண்டு போட்டால் . . .

 தொலைத்தொடர்பு ஊழலில்
தொடர்பு எல்லைக்கு அப்பாலிருப்பதாக
நாடாளுமன்றத்திலும்
மக்கள் மன்றத்திலும்
எத்தனை நாள் சொல்லப்போகிறீர்கள்?


கத்தை, கத்தையாக
லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய
அலைக்கற்றை விவகாரம்
எஸ்எம்எஸ் அனுப்பாமலே
எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.



2 ஜி பேருந்தில் துண்டு போட்டால்
பயண இடம் .
2 ஜி அலைக்கற்றையில் முதலில் வந்தவர்களால்
1.76 லட்சம் கோடி பணம் .



கன்னியாகுமரி முதல்
காஷ்மீர் வரை
தொலைபேசியில் பேச 1 ரூபாய் என்றார்கள்.
இப்போது 40 பைசா என்கிறார்கள்.
எந்த மாநிலக்காரனிடம் பேசினாலும் 
அவர்களின் பொது மொழியாய் இருப்பது
வறுமை என்று சொல் மட்டும் தான்!

தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில்
தலைமுறை காணாத முறைகேடு
சுட்டிக்காட்டினால்
சூத்திரனுக்கு  அநீதி  இழைப்பாம்
கூச்ச நாச்சமற்ற குற்றச்சாட்டு.

சூத்திர துணைவேந்தரை
கன்னத்தில் அறையலாம்.
சூத்திர ஐ.ஏ.எஸ் அதிகாரியை
பதவியைப் பறித்து
நீதிமன்றத்திற்கு இழுக்கலாம்.
சூத்திர மக்களுக்கானப் பாதையை 
சுவர் வைத்து மறைக்கலாம்.
சூத்திர பஞ்சம நிலங்களை
ரவுடிகளை வைத்து  வளைக்கலாம்.
சூத்திரன்  வாழ்வுரிமை கேட்டால்
காக்கியைக் கொண்டு ஒடுக்கலாம்
என்பது தானே தமிழகத்தில்
எழுதப்படாத விதியாக இருக்கிறது!

ஆரியகுணம் அப்பிக்கிடக்கும்
அரசு எந்திரத்தின்
ஆரக்கால்களை ஒடித்து ஒடித்து தான்
சூத்திரனுக்கான விடுதலை
இதுவரை எழுதப்பட்டது.

முடைநாற்ற
ஊழல் பெருச்சாளி
“ராசா“ வீட்டுக்கன்றுக்குட்டியானதால்
தப்பவிடுவதற்காக
தலித் அடையாளமிட்டால்
எதிர்ப்பு அலைகள்
எழமால் அடங்குமா?

எத்தனை தலைமுறை வந்தாலும்
மறந்துவிடாது
இரண்டாம் தலைமுறை
அலைக்கற்றை ஊழல்  .

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Please Change to

2 ஜி பேருந்தில் துண்டு போட்டால்
பயண இடம்.
2 ஜி அலைக்கற்றையில் துண்டு போட்டால்
1.76 லட்சம் கோடி பணம் .