புதன், 1 செப்டம்பர், 2010

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கொடுமை: பொருட்கள் வழங்க கடைகளுக்கு தடை

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளரின் குடும்பத்தினரை ஊர்க்கட்டுப்பாடு எனக்கூறி ஒதுக்கி வைத்துள்ள கொடுமை நடந்துள்ளது. அவர் குடும்பத்தினருடன் பேசினால் 500 ரூபாய் அபராதம் விதித்தும், கடைகளில் பொருட்கள் விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளனர்.

மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகில் மேலக்குயில்குடி கிராமம் உள்ளது. 600 குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில் 400-க்கும் மேற்பட்டோர் பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆவர். 200 குடும்பங்கள் தலித் சமுதாயக்குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த ஊரிரைச் சேர்ந்தவர்  பி.ராஜாங்கம். பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இவருக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளரான ஆர்.மாச்சி உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான மாச்சிக்கு 2 பெண் குழந்தைகளும், 1 மகனும் உள்ளனர். ஆர்.சிவன்காளை என்ற சகோதரர் மட்டன்கடை வைத்துள்ளார். மற்றொரு சகோதரான சாமிநாதன் என்பவர் வார்டு கவுன்சிலராக உள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக சாமிநாதன் அந்த ஊரில் உள்ள சோணைச்சாமி கோவிலில் சாமியாடியாக இருந்துள்ளார்.
       மாச்சி                                     சாமிநாதன்
                                        

மாச்சியின் தந்தை ராஜாங்கம் உள்ளிட்ட 11 பேர் கடந்த 7.3.1994 ஆம் ஆண்டு ஊர் பொதுகாரியத்திற்காக தங்களுடைய நிலங்களை இனமாக வழங்கியுள்ளனர். இதில் ராஜாங்கத்தின் பெயரில் இருந்த சர்வே எண்: 91/2-ஏ, சர்வே எண்:92/3 பி இடத்திலிருந்து சுமார் 7.5 சென்ட் நிலத்தை அவர் ஊருக்காக இனமாக வழங்கியுள்ளார்.
 இந்த நிலத்தினைப் பயன்படுத்தி சுடுகாட்டிற்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ள 1 கிலோ மீட்டர் தூரத்தில் பிற்படுத்த சாதியினருக்கான சுடுகாடும், அதைத் தாண்டி தலித் மக்களுக்கான சுடுகாடும் அமைக்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான சுடுகாட்டினைச்  சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளதுடன், பிணம் எரிக்கும் கொட்டகை சிமிண்ட்டால் கட்டிடமாக எழுப்பப்பட்டுள்ளது.அதன் அருகில் தகரக்கொட்டகையுடன் காட்சித்தருகிறது. 
11 பேர் தந்த நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் தலித் மக்களும் பிணத்தைத் தூக்கிச் செல்வதை ஏற்காத பிற்படுத்தப்பட்ட சாதியைச்சேர்ந்தவர்கள் தலித் மக்கள் வசிக்கும் காலனி அருகில் தனிப்பாதை அமைக்க முயற்சி மேற்கொண்டனர். அதற்காக மூன்று பேரிடம் நிலம் கேட்டுள்ளனர்.  மாச்சியிடம் 5 அடி பாதைக்காக வேண்டும் எனக்கேட்டதுடன் அதற்கு ஆயிரம் ரூபாயும் முன்தொகையாக வழங்கியுள்ளனர். இந்த நிலையில் பாதை அமைக்க பத்து அடி வேண்டும் மாச்சியிடம் கேட்டுள்ளனர். பத்து அடி நிலம் தரமுடியாது என அவர் கூறவும் அவரது குடும்பத்தை ஊர்க்கட்டுப்பாடு எனக்கூறி ஒதுக்கி வைத்துள்ளனர்.

                                     பிற்படுத்த சமுதாயத்திற்கான மயானம்


                                         தலித் சமுதாயத்திற்கான மயானம்

தலித் மக்கள் பிணம் தூக்கிச் செல்லும் பாதையில் செல்ல மாட்டோம் எனக்கூறி தனிப்பாதை அமைத்தவர்கள், தலித் மக்கள் குடியிருப்புப்பகுதிக்குள் பிணத்தைத் தூக்கி வருவதும், அவர்கள் வீட்டுப்பகுதிகளில் வெடி வெடிப்பதும், பூக்களை பிய்த்தெறிவதும் சரிதானா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
கடந்த 6.6.2010 அன்று மாச்சி தனது குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என அறிவித்துள்ளனர். ஆனாலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 குடும்பத்தாருக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனி யாராவது மாச்சி குடும்பத்தினருடன் பேசினால் ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீறினால் அவர்களும் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என கூறியுள்ளனர். இதன் காரணமாக மாச்சியின் அண்ணன்கள், தாய், தந்தை மற்றும் குழந்தைகள் என 13 பேர் மேலக்குயில்குடி கிராமத்தில் தனித்தீவாக விடப்பட்டுள்ளனர்.
ஊரில் உள்ள பலசரக்குக்கடை உள்ளிட்ட எந்த கடையிலும் மாச்சி குடும்பத்தாருக்கு பொருட்கள் வழங்கப்படுவதில்லை. மாச்சியின் சகோதரர் சாமியாடிய கோவிலையும் பூட்டி வைத்துள்ளனர். அவர் வைத்துள்ள கறிக்கடையில் யாரும் இறைச்சி வாங்குகிறார்களான என சோதனை செய்வதற்காக தனியாக ஆட்களை நியமித்துள்ளனர். இதன் காரணமாக ஞாயிறு அன்று வெட்டப்படும் ஆட்டிறைச்சி விற்பனையாகாமல் செக்கானூரனிக்கு கொண்டு சென்று விற்கும் அவல நிலைக்கு மாச்சியின் குடும்பம் தள்ளப்பட்டுள்ளது.
ஐந்து அடி பாதைக்கு ஆயிரம் ரூபாயை முன்தொகையாக தந்தவர்கள், சோணைச்சாமிகோவிலில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என  மாச்சி குடும்பத்திடம் மூன்றாயிரம் ரூபாய் பெற்றுள்ளார்கள். அதில் முன்தொகையாக வழங்கிய ஆயிரம் ரூபாயைக் கழித்து விட்டதாகவும், மீதிப்பணத்திற்கு ரசீது தருவதாகவும் கூறியுள்ளனர். கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டவர்கள், மாச்சி குடும்பத்திடம் இருந்து எடுத்த 5 அடி பாதையை தரவில்லை. அதில் மண்ணைப் போட்டு மயானப்பாதையாக மாற்றியுள்ளனர். அப்படி போடப்பட்ட மண், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் மேலேயே கொட்டப்பட்டுள்ளது.
மாச்சியின் சகோதரர் சாமியாடியான சாமிநாதன், வார்டு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலித் மக்களின் பகுதியில் அவர்களுக்கு குளியல் தொட்டி அமைக்க வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக முயன்றும் நடைபெறவில்லை எனக்கூறினார். அதனால் தங்களுடைய மோட்டார் பம்பில் இருந்து தலித் மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருவதைக் குறிப்பிட்டார். கடந்த 16 ஆண்டுகளாக கோவிலில் சாமியாடிய தான், கோவிலுக்கு வரக்கூடாது என்பதற்காக கோவிலில் தீபம் ஏற்றும் பகுதியை மூடிவிட்டதாகக்கூறினார்.
மாச்சியின் மனைவி முத்துலெட்சுமி அப்பகுதியில் நடைபெற்று வந்த நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ஊர்க்கட்டுப்பாடு விதித்த பின் அவரை வேலைக்கு வரக்கூடாது எனக்கூறியுள்ளனர். இதுகுறித்து அவர் முறையிட்டும் இதுவரை வேலை அவருக்கு வழங்கப்படவில்லை.
ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் மேலக்குயில்குடியில் நடைபெறும் இந்தக்கேவலம் குறித்து ஏற்கனவே, மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்குத்தாலுகாகுழு சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தலித் மக்களை சாதியின் பெயரைச்சொல்லி ஊருக்கு வெளியே ஒதுக்கி வைப்பது போல, சொந்த சாதிக்காரனையே ஒதுக்கி வைத்து தீண்டாமையைக் கடைபிடிக்கும் கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் சி.ராமகிருஷ்ணன் கூறினார். மேலக்குயில்குடியில் உள்ள பலசரக்குகடைகள், டீ கடைகளில் மாச்சி குடும்பத்தாருக்கு பொருட்கள் வழங்குவதற்கான உத்திரவாதத்தை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“ஏழை எளியோரின் உரிமைகள்,நலன்களைப் பாதுகாத்து, தமிழகத்தைத் தொடர்ந்து அமைதியின் உறைவிடமாக்கிட துணைபுரிந்திட வேண்டுமென“ தமிழக முதல்வர் கருணாநிதி, சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள்-காவல்துறை உயரதிகாரிகள் மாநாட்டில் பேசியுள்ளார்.தமிழகத்தின் மூலை முடுக்கில் நடக்கும் விரும்பத்தகாத சம்பவங்களைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள புலனாய்வுத்துறைகள் செயல்படுகிறதா என்ற கேள்வி பல நேரங்களில் எழுப்பப்படுவதுண்டு. தற்போது மேலக்குயில்குடியில் சட்டத்திற்கு சவால் விடும் சில மனிதர்கள் குறித்து புலனாய்வுத்துறை தங்களுடைய மாவட்ட உயர் அதிகாரிகளுக்கோ, தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டியதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஏனெனில் தீண்டாமை ஒரு பாவச்செயல் என்கிறது தமிழக அரசு!

2 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

கொடுமை.

பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்.

இனி தொடர்ந்து வருவேன் இங்கு. எழுதுங்கள்.

தமிஸில் இணைக்கவில்லையா?

கவிதாகுமார் சொன்னது…

தோழர். மாதவராஜ்
வருகைக்கு நன்றி,