சனி, 11 செப்டம்பர், 2010

தொப்புள் காசு

  களிமண் பிசைந்து
அச்சில் வார்த்து
எருக்கம்பூ சூட்டி
தொப்புளில் காசுவைத்து
விதவிதமாய்
கொழுக்கட்டை படையலிட்டு
வீடுகளில் கொண்டாடப்படுகிறது
விநாயகர் சதுர்த்தி.

பொம்மைகளை வைத்து
விளையாடும் குழந்தைகளுக்கு
யானை முகத்தோடு
காட்சி தரும்
விநாயகனைப் பிடிக்கிறது.

கோவில், குளம், கண்மாய்
அரசமரம், ஆட்டோஸ்டாண்ட்
ரயில் நிலையமென
வியாபித்த இடத்திற்குத் தகுந்தவாறு
பெயர் சூட்டி
விளிக்கப்படுகிறார் விநாயகர்.

மூன்று நாள் படையலுக்குப் பின்
கண்மாய், ஆறுகளில்
கரைக்க எடுத்துச் செல்லும்
விநாயகனின்
தொப்புள் காசை எடுக்க
நீரில் மூழ்கிய பலருக்கு
நெத்திக்காசு ஒட்டப்பட்டிருக்கிறது.

தற்போது
நீரின் முகவரியற்று 
தாகத்தோடு வாயகன்று கிடக்கும்
ஆறுகளில்  கரைக்க
ஊர்வலமாய் எடுத்துவரப்படும்
கஜமுகன்கள்
பள்ளிவாசல் வந்தவுடன்
துள்ளிக்குதிக்கின்றன.


சின்னஞ்சிறு
மூஞ்சுருவின் முதுகில் ஏறி
பெரும்பான்மை பலம் பிரயோகிக்கும்
விநாயகன்
சுதந்திரப்போராட்டத்தின்
ஒரு அடையாளமாய்
எப்படி இருந்திருக்கக்கூடும்?

கருத்துகள் இல்லை: