திங்கள், 2 ஆகஸ்ட், 2010
கடலின் நிறம் நீலமா, சிவப்பா?
கடலின் நிறம் நீலம் என்றாலும், தமிழகத்தில் அது பல நேரங்களில் சிவப்பாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லை தாண்டிச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை குருவியைச் சுடுவது போல சுட்டுக் கொன்று வருகிறது.
சமீபத்தில் தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து பிரதமருக்கு வழக்கம் போல முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். உடன்பிறப்புகளுக்கு முரசொலியில் கடிதம் எழுதிப்பழக்கப்பட்ட முதல்வர், அவ்வப்போது பிரதமருக்கும் கடிதமாக எழுதி வருகிறார். இலங்கை தமிழர் பிரச்சனையானாலும், விலைவாசி உயர்வானாலும், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டாலும் தயாராக இருக்கிறது கடிதம்.
கடல் சார்ந்த தொழிலான மீன்பிடிப்பதை தங்களது பாரம்பரியத் தொழிலாகக் கொண்டுள்ள மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் அன்றாடம் பய உணர்வோடுடன் கடலுக்குச் சென்று வருகின்றனர். பாக் நீரிணைப்பு பகுதியில் மீன் பிடிக்கச்செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருகிறது. கோடிக்கரையிலிருந்து தனுஷ்கோடி வரை அமைந்த பகுதி தான் பாக் நீரிணைப்பு. கிபி 1755 ஆம் ஆண்டு முதல் 1763 ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் இந்தியக்கம்பெனி கவர்னராக இருந்த ராபர்ட் பாக்கின் பெயரைத் தான் இந்த கடல்பகுதிக்குச் சூட்டினர்.
இராமேஸ்வரம் துவங்கி இராமநாதபுரம்,புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் இப்பகுதியில் மீன்பிடிக்கிறார்கள். இப்பகுதியில் மன்னார் துவங்கி யாழ்ப்பாணம், கிளிநொச்சியைச் சேர்ந்த இலங்கை மீனவர்களும் மீன்பிடிக்கிறார்கள். இந்தியா, இலங்கை இடையில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கும் கடல்பரப்பில் சர்வதேசக் கடல் பகுதி கிடையாது. ஏனெனில் இது குறுகிய கடல்பகுதியாகும். ஐரோப்பில் உள்ள பால்கன் பகுதி போல பாக் நீரினணைப்பு பகுதியில் மீன்வளம் அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் இந்தியாவைச் சேர்ந்த தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதுடன், பலரை உயிரோடு பிடித்துச் சென்றுவிடுகின்றனர். நமது மீனவர்களின் படகு, வலை,செல்போன் மற்றும் மீன்களைக் கொள்ளையடிப்பதுடன் பலரைச் சுட்டுக் காயப்படுத்தியும் வருகின்றனர்.
கடந்த 13.8.1983 -ல் தமிழக அரசுக்குச் சொந்தமான ZB(E) -8 என்ற மீன்பிடி படகை இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டது தான் முதல் சம்பவமாக நடைபெற்றுள்ளது. இதில் 5 மீனவர்கள் படுகாயமடைந்தனர். அதற்கடுத்து கடந்த 10.12.1983 -ல் இலங்கை கடற்படையால் முதல் கொலை கடலில் அரங்கேறியது. அதனைத் தொடர்ந்து பலரைச் சுட்டுக் கொல்ல ஆரம்பித்தது. கடந்த 1996-ஆம் ஆண்டு ஜூன்-23ந் தேதி தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையையும் துவக்கியது. கடந்த 14 ஆண்டுகளில் 250-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் சுமார் 1300 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1983-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 350 பேர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விபரக்கணக்கை மீனவர் அமைப்பினர் கூறுகின்றனர்.இதுவரை 2 ஆயிரம் கோடி ரூபாய் இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு(சிஐடியு) மாநிலப்பொதுச்செயலாளர் பா.கருணாநிதி கூறுகையில்,கச்சத்தீவையொட்டியுள்ள பகுதியில் ஏற்கனவே, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வந்த உரிமை மீண்டும் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு செய்து கொடுத்தாலே, நமது மீனவர்கள் மீதானத் தாக்குதல் பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது. அதை செய்யாத காரணத்தால் இதுவரை தமிழகத்தினைச் சேர்ந்த 350 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 300 பேர் காணாமல் போய் உள்ளனர். தங்களுடைய கணவர்கள் இறந்தார்களா, இல்லை உயிருடன் இருக்கிறார்களோ எனத் தெரியாமல் பல பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றது. இதுவரை காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.800 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலர் உடல் ஊனத்தோடு வாழவழித்தெரியாமல் நடைபிணமாய் வாழ்கிறார்கள். இவர்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்திய கடலோர ரோந்து படையின் பணி மிகவும் மோசமாக உள்ளது. இதற்காக வாங்கப்பட்ட கப்பல் என்பது அதற்கான பணிக்குப் பயன்படுத்தவில்லை என்ற நிலையில் தான் உள்ளது. ஆகவே, இந்திய கடற்பகுதியில் உரிய ரோந்துபணியை மேற்கொள்வதற்கான ஏற்பாட்டை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
ஒருபுறம் இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் பயந்து பயந்து வாழ்க்கை நடத்தி வரும் நிலையில், தமிழக கடற்கரைகளை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் நோக்கோடு கடற்கரை மேலாண்மை சட்டம் என்ற பெயரில் மத்திய அரசு,மாநில அரசுகள் தாரைவார்த்து வருவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு வருவதைக் கண்டு கொதித்து நிற்கின்றனர். சட்டம் என்ற பெயரில் மீனவர்களின் தாய்மடியான கடற்கரைகள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. சொசுகு கட்டிடங்கள் எழுப்புவதற்கான ஆயத்தப்பணிகள் தமிழகத்தில் பல இடங்களில் ஜரூராக நடைபெற்று வருகிறது.பாம்பன் பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் வளைக்கப்பட்டு வருகிறது. இதே போல குத்துக்கல் வலசை, மண்டபம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இப்பணி நடைபெற்று வருகிறது. 5 கிலோ மீட்டர் இருந்த கடற்கரை 1.5 கிலோ மீட்டர் சுருங்கி விட்டது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷீடம், நிரபராதி மீனவர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் மி.யு. அருளானந்தம் எடுத்துரைத்துள்ளார். கடந்த மாதம் 22-ந்தேதி இலங்கை சென்று வந்த அவரிடம் பேசியபோது, இந்தியா மீனவர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகமாகி வருகிறது. எந்த நாட்டிலும் மீனவர்களை இன்னொரு நாட்டு கடற்படை சுடுவதில்லை. இந்தியாவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் இதுவரை இலங்கை மீனவர்களைச் சுட்டது கிடையாது. எத்தனையோ முறை தமிழகம் வந்த இலங்கை மீனவர்களை அவர்களிடமே ஒப்படைத்துள்ளோம். தனுஷ்கோடியில் இருந்து கோடியக்கiடிர வரை 140 கிலோ மீட்டர் தூரமாகும். இதில் 16 கிலோ மீட்டரில் தான் மீன்பிடிக்க வேண்டும் என்றால் எப்படி முடியும்? தமிழக மீனவர்கள் பாக் இணைப்பு விட்டால் வேறு இடத்தில் மீன்பிடிக்க முடியாது.இதை இந்திய அரசும், இலங்கை அரசும் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை தமிழகத்தில் இருந்து காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கை சென்ற போது வெளிக்கடை சிறையில் 37 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அதில் 13 பேர் தமிழர்கள் ஆவர். இதில் சிலர் போதை பவுடர் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல மதுரை மத்தியச்சிறையில் 26 இலங்கை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் வரை இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை படகோடு அனுப்பி வைத்துள்ளோம். அதே போல் இலங்கை அரசு 1300 பேரை விடுதலை செய்துள்ளது. தமிழக, இலங்கை நாட்டினைச் சேர்ந்த மீனவர்கள் பேசி ஒரு சுமூக உடன்பாட்டிற்கு வரவேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு மாநில அரசு உரிய முயற்சி எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
தமிழக மீனவர்களின் உயிர் மற்றும் அவர்களது உடமைகளைப் பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை மத்திய அரசு குறிப்பாக இந்திய கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கடற்படை தமிழக மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்திய மீனவர் உரிமை மீறலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சி.சே.ராசன்,கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட அனைத்து சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கு குறிப்பாக விதவைகளுக்கு வாழ்வாதாரம் ஈட்டும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும், அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் அவர்களது மன அழுத்தம் போக்க ஆற்றுப்படுத்துதல் உள்ளடக்கிய ஒரு முழுமையான மறுவாழ்வு திட்டத்தை இந்திய அரசு உடனே உருவாக்க வேண்டும் என்று கூறினார். இயற்கை உணவான மீனைப் பிடிப்பதற்காக தங்களது உயிரைப் பணயம் வைக்கும் மீனவர்களை அச்சுறுத்தும் கடல் அலைகள் ஒருபுறம் என்றால், இலங்கை கடற்படை ஒருபுறம். அலையோடு மோதி வாழும் தமிழக மீனவர்களின் கண்ணீரால் கடலின் உப்பு தன்மை அதிகமாகி வருகிறது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக