புதன், 13 ஜனவரி, 2010

பேரோசை நிகழ்த்திய மௌனம்

மேய்ச்சலற்ற நிலங்களில்

படிந்துள்ள வெறுமையை

பசுமையென நினைத்து

சுவைக்கின்றன மாடுகள்.

நீர்ப்பரப்பில் அலையும்

விட்டிலின் அதிர்வுகளால்

விரியும் கோலவடிவம்

ஒரு பேரோசை நிகழ்த்திய

சுவடின்

மௌனத்தைப் போன்றுள்ளது.

யாருமற்ற வீதிகளில்

பயணிக்கும் மனிதனின்

உதடுகளிலிருந்து

உதிர்ந்து கொண்டிருக்கிறது

அவனுக்கான வார்த்தைகள்.

முன்னடி வைக்கும்

பாதங்களிடம் -நிழல்

ஏதோ ஒரு நாளில்

கேட்கக்கூடும்

என் தலையில் மிதிப்பதை

எப்போது நிறுத்தப்போகிறாய்?
( வெள்ளி, 11 டிசம்பர் 2009 கீற்று இணையத்தில் வெளிவந்த கவிதை )

கருத்துகள் இல்லை: