காதலில் திளைத்த தருணங்களில்
முத்தங்களுடன்
ஆசையாய் வாங்கித்தந்த
பூக்களின் எண்ணிக்கையில்
எத்தனை டேலியா
எனத் தெரியவில்லை.
மல்லிகை, கனகாம்பரம், முல்லை,
ரோஜா என மலர்களை
அள்ளிவரும் பூக்காரியின் கூடையில்
எப்போதும் சிரிக்கும்
டேலியா பூக்களைக் காணவில்லை.
ஹோட்டல்கள், விமான நிலையங்கள்
வரவேற்பறைகளை
நிறைக்கச் சென்றுவிட்டதாக
அர்த்தம் கூறினாள்.
என்னிடம் டேலியாபூ
வாங்கிக் கொண்ட காதலி
இன்னொருத்தனின்
மனைவியாகிப்போனாள்.
டேலியா பூக்களற்ற வீதியில்
அவள் இப்போது வருவதேயில்லை.
என்கவிதையைப் போல
அவளும் சமைத்துக் கொண்டிருக்கக் கூடும்
அவளுக்கான ஒரு கவிதையை.
(ஏப்ரல் 2009 செம்மலரில் வெளியான கவிதை )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக