புதன், 13 ஜனவரி, 2010

கவிதாகுமாரின் அழுக்கான நெருப்பு

கவிதை என்பது விதைதான். வாசிப்பவனின் இதயத்தில் முளைக்க வேண்டும். அப்படி முளைக்கும் விதையே கவிதை. இத்தகைய கவிதைகள் இன்று அபூர்வமாகவே வருகின்றன. அதிலும் சமூகப் பிரச்சனைகளை மையமாக வைத்து வெளிவரும் கவிதைகள் மிகவும் குறைவு.

மதுரைக் கவிஞர் கவிதாகுமாரின் அழுக்கான நெருப்பு தொகுதி பற்றிஎரிகிறது. முந்தைய இரு தொகுப்புகளைவிட இந்தத் தொகுப்பில் கவித்துவமும் செய்நேர்த்தியும் மிளிருகிறது. சமகாலத்துச் சமூக அநீதிகளைச் சாடும் கவிதைகளே இத்தொகுப்பில் அதிகமாய் வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஈராக் முதல் உத்தப்புரம் வரை எழுதி தனது முற்போக்கு முத்திரையைப் பதித்துள்ளார். விசயங்களை வித்தியாசமான கோணத்தில் இவர் பார்ப்பதற்கு "ஆறு வித்தியாசங்கள்" கவிதை ஒரு உதாரணம்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு வல்லூரைப்போல நாடுகளை நரவேட்டையாடி வருகிறது. ஆப்கானிஸ்தான் முதல் ஈராக் வரை இந்தக் கொடூரத்தை நாம் காண்கிறோம்.

"பல தேசத்து மக்களின்

ரத்தத்தில் குளியலாடிவிட்டு

இன்னும் எப்படி அந்தமாளிகை

வெள்ளையாய் காட்சி தருகிறது" என்று

வெள்ளைமாளிகையைக் கேள்வி கேட்கிறார். மேலும், "கழுகுகளோடு கரம்கோர்த்துப் பழகியவர்களுக்கு புறாக்களின் அழகு புரியப்போவதில்லை" என்பதில் கவிதை கொஞ்சுகிறது.

இளவயது நினைவுகள் அழியாதவை. நாய்க்கடி பட்டுச் செருப்படி வாங்கியவன் குடித்துவிட்டுக் கிடப்பதும் செருப்படிபட்டாலும் புத்திவராது என்பதும் 'புத்தி'கவிதை சுத்தமாய் சொல்கிறது. சாக்குருவி, திசையெங்கும், நாரைகள் ஆகிய கவிதைகளும் அற்புதமான உருவகங்கள். அதில் வெண்மணிப் படுகொலையை வர்ணித்திருப்பது தீப்பற்றி எரிகிறது.

இந்தியாவில் பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் முதல் மணியடித்தது பாபர் மசூதி இடிப்புத்தான். அதைத் தொடர்ந்தே நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. இதில் மட்டும் இந்து, முஸ்லிம் வேறுபாடு இல்லை.

"காந்தி இதயத்தில் வாழ்ந்த

ராமனைக் கொன்றுவிட்டு

அயோத்தியில் எதற்கு அவனுக்கு

சமாதி கட்டத் துடிக்கிறீர்கள்?"

என்று கேட்பதில் காந்தியைச் சுட்டுக் கொன்றதும் அவர்கள்தான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

அதேபோல், ஆலயத்துக்குள் தமிழும், தலித்தும் நுழையக்கூடாது என்போரை ஹைகூவில் கண்டனம் செய்துவிட்டு-

"எத்தனை படைவரினும்

எத்தனை முறைவரினும்

மறுபடி பிறப்பெடுப்போம்

மனுவைக் கொல்லும் வரை "

என்று முடிக்கிறார். கவிதை நூலை இவரது தந்தையார் அமரர் தோழர் பழனிச்சாமிக்கு அர்ப்பணித்திருப்பது பொருத்தமானது. அவர் அவசர நிலையின் போது என்னோடு சில மாதங்கள் தலைமறைவுப் பணியில் சக தோழராய் நின்றவர். வாசித்தே தீர வேண்டிய தொகுப்பு இது.
- எஸ்.ஏ.பெருமாள்

வெளியீடு :

காலம் வெளியீடு

25, மருதுபாண்டியர் 4வது தெரு,

கருமாரியம்மன் கோவில் எதிர்வீதி,

மதுரை - 625 002

விலை ரூ.40

கருத்துகள் இல்லை: