
சாலைவீதியில்
சிலுவையில் அறையப்பட்டிருந்தார்
இயேசு நாதர்!
காற்றின் திசை ஓட்டத்தால்
கர்த்தரின் பாதங்களில்
வழிந்த இரத்தத்தில்
மொய்த்துக் கிடந்தன தூசி துகள்கள்.
பழைய துணியை
பிரிமணை போல் சுற்றி-கர்த்தருக்கு
காவல்வேலி அமைத்தான் ஓவியன்.
சிந்தப்படும் சில்லரைகளுக்காக
வெகுநேரம் காத்திருந்தான்.
இடப்பை துழாவ மனமின்றி
இயல்பாய் கடந்தார்கள் அவனை.
இரக்கமில்லா மனிதர்களை
அவன் எண்ணும்வேளையில்
இறங்கி வந்தது மழை
யாருமற்ற வீதியில்
நனைந்து கொண்டிருக்கிறார்
இயேசுநாதர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக