
கொதிக்கும் நீருக்கு
பயப்படாத அப்பாவிற்கு
குளத்து நீரைக்கண்டால் பிடிப்பதேயில்லை.
காரணம் நீச்சல்.
இலங்கை கடற்கரைத்தீவில்
பிறந்த அப்பாவிற்கு
இடுப்பு நீரைக் கண்டாலே
ஏனம்மா பயம் என்ற கேள்விக்கு
இதுவரை சொல்லப்படவில்லை பதில்.
தாமரை மிதக்கும்
தடாகம் போல
நான் குடியிருந்த
வீட்டைச்சுற்றி குளங்கள்
புதுக்குளம்
சம்பக்குளம்
கொடிக்குளம்
கோசாகுளம் .
அப்பாவிற்கு பயந்தே
உடன்செல்பவர்களின்
துணிகாத்து
குளத்தின் கரைமேல்
காத்திருப்பேன்.
முங்கு நீச்சல்
கடப்பாரை நீச்சல் என
பாய்ந்து குளிக்கும்
பையன்களைப் பார்த்து
பயம் தொலைந்து போனது.
குளக்கரையில் கால்மிதித்த
ஒவ்வொரு நாளும்
விழும் பூசைக்கு
ஒத்தடமாய் அம்மா.
திரௌபதி அம்மன் கோவில்
குங்குமப்பூச்சோடு
வரும்போதே
காந்திபுரம் கண்மாய் போனாயா
என கண்டுப்பிடித்து மிரட்டும்
அக்காவின் பைக்கட்டு
பல நாட்கள் என்சுமைக்கடன்.
மீனைத்தேடிய நாரையாய்
நீச்சல் பழக
குளங்களைத்தேடி
அலைந்த காலங்கள்
இன்னமும் ஈரமாய். . . .
நகர நாகரீகம்
வளர வளர
குளங்கள் வீடுகளாய் மாற
வெளியூர் சென்றுவிட்டன நாரைகள்.
வளர்ந்து நிற்கும்
என் குழந்தைக்கு
குளத்தின் அடையாளத்தை
எப்படிச்சொல்லி விளங்கவைப்பது?
- ப.கவிதா குமார் (kavithamukil@rediffmail.com)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக