புதன், 17 டிசம்பர், 2008

கஜமுகம்


காலில் விலங்குகளோடு
சாலையில் நடக்கும்
யானைகளைப் பார்த்தால்
பயத்தை விட
பரிதாபமாகத்தான் இருக்கிறது.
ஐம்பது பைசா வாழைப்பழத்திற்காக
கூனிக்குறுகி கையேந்தும்
யானைகளின் கண்ணீரைக் குடிக்கும்
ஈக்களை விரட்ட
எத்தனிக்காமல்
அடுத்த கடை நோக்கி
விரட்டுகிறான் பாகன்.
தோளைத் தட்டி
பேருந்து கம்பிகளிடையே
பிச்சை எடுக்கும் யானைகள்
மதுரையில் பிரசித்தம்.
ஆனால்
கோவில் யானைகள்
கொடுத்து வைத்தவைகள்.
கண்மாயில் நீர் இல்லாவிட்டாலும்
கம்பரசர் மோட்டார் நீரால்
காலையிலேயே குளிப்பாட்டப்படுகிறது.
பிரசாதம் முதல்
பேரிச்சம் பழம்வரை
சுவைத்துண்ணும் யானைக்கு
பல மணி நேரம்
செலவழித்து நாமம் போடப்படுகிறது.
கவளம் கவளமாக
கம்பஞ்சோறுருண்டையை
உள்ளே தள்ளும்
கோவில் யானைகள்
ஒருவாரம் போடும்
லத்தியின் அளவைவிட
சிறியதாக இருக்கின்றன
தெருவோர யானைகள்.
தெருவோர யானைளைப்போல
தேய்ந்து கிடக்கிறார்கள் மக்கள்.
நிஜமுகங்களின் பசிஉணர்வை விட
கஜமுகன்களின்
புத்துணர்வு தான் அரசுக்கு
மகிழ்ச்சியளிக்கிறது.
மனிதர்களை மகிழ்விக்கும்
ஆணைகள் எப்போது வரும்?

கருத்துகள் இல்லை: