ஞாயிறு, 20 மார்ச், 2011

தாவியவர்களைத் தாங்குவதும் - தாங்கியவர்கள் ஏங்குவதும் . . . .


“மாற்றன்  தோட்டத்து மல்லிகையும் மணக்கும்“ என திமுகவைத் துவங்கிய அறிஞர் அண்ணா சொன்னாலும் சொன்னார், அடுத்தக்கட்சியினரை இழுப்பதில் திமுகவினர் காட்டும் அக்கறையும், வேகமும் அண்ணா இருந்தால் அரண்டேயிருப்பார்.
ஒரு கட்சியின் கொள்கைப் பிடித்து மாற்றுக்கட்சியில் இருந்து கட்சி மாறியவர்களும் உண்டு. அமாவசை வரை தேனடையில் இருந்து விட்டு பறந்து போகும் தேனீ போல, பதவி காலம் முடியும் வரை ஒரு கட்சியில்  இருந்து விட்டு ,மாற்றுக்கட்சிக்கு தாவுவது என்பது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. அப்படித் தாவுபவர்களுக்கு முன்னுரிமை தந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பளித்துள்ளது பாரம்பரியமாக கட்சியில் உள்ள திமுகவினருக்கு அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் உருவாக்கியுள்ளது.
பல நாட்களாக சவ்வுமிட்டாய் போல இழுத்து முடிந்த திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிந்து, கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கியது போக திமுக வசமிருந்த தொகுதிகள் 119. தமிழகத்தில் உள்ள  234 தொகுதிகளில்  51 சதவீத தொகுதிகளில் மட்டும் திமுக வேட்பாளர்கள் களம் காண்பது முதல் முறையெனச் சொல்லலாம்.  இந்த 51 சதவீதத்தில் 15 சதவீதம், மாற்றுக் கட்சிகளில் இருந்து தாவியவர்களுக்குச்  சென்றுள்ளதால், உண்மையான உடன்பிறப்புகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த பழைய முகங்களான வி.பி.துரைசாமி, எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், ஆகியோருடன் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று ஓராண்டுக்கு முன் திமுகவில் இணைந்த அனிதா ராதாகிருஷ்ணன், சம்பந்தமில்லாமல் தனது பதவியை ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலில் நின்று திமுக சட்டமன்ற உறுப்பினரானார். இதே போல மதிமுக சார்பில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி, எந்த காரணமுன்றி தனது பதவியை ராஜினாமா செய்து  தேர்தலில் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்ற கம்பம் ராமகிருஷ்ணனுக்கும் இம்முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட சத்தியமூர்த்தி, திமுகவிற்கு தாவியதற்காக தற்போது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  அதிமுகவின் முரட்டுப் பக்தராக திகழ்ந்த சேகர்பாபு சமீபத்தில் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்பு திமுகவிற்கு தாவிய அவருக்கும் தற்போது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்துச்சாமி, திமுகவில் தஞ்சம் அடைந்ததையொட்டி அவருக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அறிவாலயத்தில் இருந்து தாயகம் சென்று மீண்டும் அறிவாலயம் நோக்கி பயணப்பட்ட கரூர் கே.சி.பழனிச்சாமி, திருச்சி செல்வராஜ், மைதீன்கான்  ஆகியோருக்கு ஏற்கனவே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தற்போது அவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல மதிமுகவில் இருந்து கட்சி மாறிய மு.கண்ணப்பனுக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, கருணாநிதி தான் கம்யூனிஸ்ட்(!) என தண்டோரா போட்டுக் கொண்டிருக்கும் திருப்பூர் சி.கோவிந்தசாமிக்கும் திமுகவில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கு பல ஆண்டுகளாக உழைத்துக் களைத்த உடன்பிறப்புகளைக் கண்டுகொள்ளாமல் அடுத்த கட்சியில் ஓடிவந்தவர்களுக்கு தலைவர் கருணாநிதி வாய்ப்பளிக்கிறார். ஆட்சி மாறினால் அவர்கள் மீண்டும் அவர்கள் கட்சி மாற மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது என கேள்வி எழுப்புகிறார்கள் மூத்த திமுக தோழர்கள். 















1 கருத்து:

க. சீ. சிவக்குமார் சொன்னது…

மாற்றுக் கட்சிகளில் சம்பந்தப் பட்டநபரின் தராதரம் என்னவாக இருந்தது என்பதைப் பொருத்துத்தான் கட்சிகளில் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக ஓ.பன்னீர் செல்வம் தி.மு.கவுக்குச் சென்றால் அவருக்கு வாய்ப்பு தராமல் இருக்கமுடியுமா?

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு சமயங்களில் கூடுதலான மணம் இருந்துவிட்டால் யார் என்ன செய்ய முடியும்?