சனி, 13 நவம்பர், 2010

என்கவுன்ட்டரால் குற்றங்கள் குறையுமா?




மெசபடோமியாவின் தலைநகராக திகழ்ந்த பாபிலோனை ஆண்ட ஆறாம் அரசரான ஹமுராபியால் கி.மு.1792 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தான் மனிதகுல வரலாற்றில் முதன் முதலாக எழுதப்பட்ட சட்டங்களாகும். இச்சட்டங்கள் யாவும் இந்த அரசனுக்கு 400 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்டவையாகும்.

“ ஒரு மகன் தன்னுடைய தந்தையுடன் பிரச்சனை ஏற்பட்டால், அவனுடைய கைகள் வெட்டப்பட வேண்டும் . கண்ணுக்கு கண் பிடுங்கப்படுதல் வேண்டும்" என்பது உள்ளிட்ட சட்டங்கள் ஹமுராபி ஆட்சியில் தான் அமல்படுத்தப்பட்டன. இச்சட்டங்கள் இன்றளவும் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன. சட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட அட்டூழியங்கள், பின் தனி நபர் மோதல்களாக, படுகொலைகளாக பரிணாமம் பெற்றன.

குற்றங்களைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்தியாவில் அரசியல் சட்டத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கர், பொதுநலன் கருதி சட்டத்தில் பல ஷரத்துக்களை வரைந்துள்ளார். அவர் வடிவமைத்த இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 என்றாலும், அது நடைமுறைக்கு வந்தது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதியாகும். இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. அதில் அடிப்படை உரிமைகள் சட்டத்தின் முன் எல்லா குடிமக்களுக்கும் சமத்துவத்தை வழங்குகின்றன என்றும், அடிப்படை உரிமைகள் தனிமனித நலனுக்கும், பொது நலனுக்கும் இடையே சம நிலையை ஏற்படுத்துகின்றன என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

ஆனால், எல்லா குடிமக்களுக்கும் சமத்துவத்துவத்தை வழங்கக்கூடிய ஜனநாயக அரசுகளாக மத்திய, மாநில அரசுகள் இல்லாத நிலையில் தனி மனித நலனுக்கும், பொது நலனுக்கும் அந்த அரசுகளால் ஆபத்தும் ஏற்படுகிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசு பயங்கரவாதத்தில் துவங்கி, பல்வேறு நாடுகளில் மோதல் என்ற பெயரில் நடைபெறும் என்கவுன்ட்டர் கொலைகள் வரை நீடித்து வருகிறது. அதற்கு சட்டம் இடம் கொடுக்கிறதா என நினைத்தால், “ தற்காப்புக்காக காவல்துறையினர் இது போன்ற கொலைகளை செய்யலாம்" என இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 46-வது பிரிவு கூறுகிறது. ஆனால், அதே சட்டம் “என்கவுன்டரில் கொல்லப்பட்டால், அதில் தொடர்புடைய காவலர் அல்லது அதிகாரி மீது இந்திய தண்டனைச்சட்டம் 307-வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டுப்பதிவு செய்ய வேண்டும்“ எனவும் கூறியுள்ளது. அத்துடன் அந்த அதிகாரி சட்டச்சான்றுகளுடன் சட்டத்தின் முன், தான் செய்த கொலையானது தற்காப்பிற்காக நடத்தப்பட்டது என நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இச்சாவுகளை நடத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு உயர்பதவிகளோ, பரிசுகளோ வழங்கி மேலும் அவரை ஊக்குவிக்கக் கூடாது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. ஆனால், அந்த நெறிமுறைகள், வழிகாட்டுதல்களை காவல்துறை பின்பற்றுவதில்லை.

தேசிய மனித உரிமை ஆணையம் 16 ஆயிரத்து 784 வழக்குகளை விசாரணை நடத்தியது. இந்தியாவில் கடந்த 1993 ஆம் ஆண்டிலிருந்து 2009-ஆம் ஆண்டு வரை காவல்துறை நடத்திய என்கவுன்ட்டர்களின் எண்ணிக்கை என்பது சுமார் 2560 என கண்டறியப்பட்டுள்ளது. அதில் போலி மோதல் சாவுகள் என கண்டறியப்பட்டது 1224. இதில் 16 பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என தேசிய மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் திமுக 13.5.2006 ல் பதவியேற்றதில் இருந்து இதுவரை சுமார் 30 பேர் என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் கொலைகள் தான் அதிகம்.

சமீப காலங்களில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 6068. இதில் 419 கொலைகள் ஆதாயக்கொலைகளாகும். கடந்த ஆண்டு மட்டும் 22 ஆயிரத்து 914 கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையின் இணையதளம் அறிக்கையில் கூறியிருப்பதில் இருந்து சமீபகாலத்தில் பெருமளவு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என்பதை புரிந்து கொள்ள முடியும். சட்டம் - ஒழுங்கு சரியில்லை என புகார் எழும் நேரங்களில் எங்காவது ஒரு இடத்தில் என்கவுன்ட்டர் நடைபெறுகிறது. நடத்தப்பட்டது கொலை என்பதை மீறி ஊடகங்கள் எழுப்பும் பொய்பிம்பங்கள், அந்த கொலை நடவடிக்கையை ஒரு ஜனநாயக நடவடிக்கையைப் போல தோற்றம் காட்டுகின்றன. மரணதண்டனை சட்டம் உள்ள நாடுகளில் கொலை குற்றங்கள் குறையவில்லை. என்கவுன்ட்டர் என்ற பெயரில் நடத்தப்படும் கொலைகளின் மூலம் குற்றங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது என அரசு நினைக்கிறது போலத் தெரிகிறது. காவல்துறையால் நடத்தப்படும் என்கவுன்ட்டரால் கொல்லப்படும் நபரின் குற்ற வழக்குகள் அத்துடன் குழிதோண்டி புதைக்கப்பட்டு விடுகின்றன. அப்படியென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தான் பதில் சொல்லப்போகின்றன நீதிமன்றங்கள்?

3 கருத்துகள்:

Kodees சொன்னது…

ஆமாம் ஆமாம், மரணதண்டனையால் குற்றம் குறையவில்லை - எனவே மரணதண்டனை தேவையில்லை. என்கவுன்ட்டரால் குற்றங்கள் குறையவில்லை - எனவே என்கவுன்ட்டர் தேவையில்லை.

திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றுக்கு சிறை தண்டனை அளித்தும் குற்றங்கள் குறையவில்லை - எனவே சிறை தண்டனையும் தேவையில்லை.

நல்ல யோசனை இல்லீங்க!!

ப.கவிதா குமார் சொன்னது…

கோடீஸ்
நீங்கள் சொல்வது போல்
குற்றங்களுக்கு தண்டனை என்பது தேவை தான். அதற்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றங்கள் அதன் பணியை செய்ய வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

நீங்கள் கடைசியாக நடந்த என்கவுண்ட்டரை மனதில் வைத்துப் பொதுவாகப் பேசுகிறீர்கள்.
பொதுவாக என்கவுண்டர் வேண்டாம் நீதியின் முன் நிறுத்தித் தண்டனை கொடுக்க வேண்டுமென்பதே அனைவர் விருப்பமும்.
இதே வேளை உண்மையிலே காவலரைத் தாக்கித் தப்பமுனைவோரைப் போடத்தான் வேண்டும்.
அதைவிடக் குழந்தைகள் வாழ்வில் விளையாடினால் கொதிப்பு வேறுமாதிரித் தான் இருக்குமென்பதையும் புரியவைக்கவே இந்த என்கவுண்டர்.
ஆனால் இந்த என்கவுண்டர் அரசனானாலும், ஆண்டியானாலும் நடத்தப்படுமாயின் சிறப்பே!
என் செய்வது உலகில் அதுவும் நமது உலகங்களில் அரசனுக்கு வேறு ஆண்டிக்கு வேறே!
அதை மாற்ற முயல்வோம்.
இக்குழந்தைகள் கூட ஒரு செல்வந்தரின் குழந்தைகள் அதனால் தான் இந்தத் துரித நடவடிக்கை எனவும் செய்தவனும் ஒரு ஏழை எந்த அரசியற் பின்புலமும் அற்றவன் எனும் பேச்சில் உண்மையில்லாமல் இல்லை.
அதையும் மாற்ற முயல்வோம்.ஆனால் நடக்குமா?