செவ்வாய், 22 ஜூன், 2010

செம்மொழி மாநாடு-தமிழ் நெஞ்சங்கள் எதிர்பார்ப்பது என்ன?

பெரும்பொருட்செலவில் கோவையில் கோலாகலம் என்ற சொல்லுக்குப் புதிய பொருள் தரும் விதமாகத் தமிழக அரசு நடத்தும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு துவங்கிவிட்டது.பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதுமிருந்து வந்து கோவையில் குவிந்துள்ளார்கள்.வெளிநாடுகளிலிருந்தும் பல தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டுக்கு வருகை புரிந்துள்ளனர்.கோவை மாநகரில் திரும்பும் இடமெல்லாம் மாநாட்டுத் தோரணங்கள்  ,சுவர் ஓவியங்கள்  எனக் கோவைத்  தெருக்களில் எங்கும் தமிழ் முழக்கம்.அந்த மகிழ்ச்சியில் நாமும் பங்கு கொள்கிறோம்.கூடும் மக்கள் ஏதோ ஒருவிதமான தமிழ் உணர்வில்தான் கூடுகிறார்கள்-சும்மா வேடிக்கை பார்க்க மட்டும் அல்ல என்றே நம்புகிறோம்.

”இவ்வளவு ஆடம்பரமும் செலவும் தேவைதானா ” என்று 1968இல் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் சென்னையில் இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது தந்தை பெரியார் கேட்டார்.உலகத்தமிழ் மாநாடென்றால் மொழியின் பல்வேறு துறைகளில் நடைபெறும் ஆய்வு மாநாடாகத்தானே இருக்க வேண்டும் எதற்கு இந்த ஆடம்பரமான வீண் செலவு என்பதுதான் தந்தை பெரியாரின் கேள்வி.ஆனால் மக்கள் மயப்படுத்தப்படும் ஒன்றை – அதில் உள்ள ஜனநாயகத் தன்மை காரணமாக நாம்  எதிர்க்க வேண்டியதில்லை.ஆனால் இது மட்டுமே மிச்சம் என்று ஆகிவிடக்கூடாது என்பதுதான் நம் அச்சம்.

தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சங்களில் இம்மாநாடு உண்மையில் தமிழுக்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எழுகின்ற எதிர்பார்ப்புக்களை இன்று இம்மாநாடு துவங்கும் வேளையில் தொகுத்துப்பார்ப்பதும் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதும் அவசியம் என்று கருதுகிறோம்.

1.உயர்நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக –அலுவல் மொழியாக-தமிழை ஆக்கிட குறிப்பிட்ட தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற அதிகாரபூர்வமான அறிவிப்பை இம்மாநாட்டில் பங்கேற்கும் மத்திய அமைச்சர் எவரேனும் செய்திட வேண்டும்.மதுரை வழக்கறிஞர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தையும் இதற்கு ஆதரவாக முக்கிய எதிர்க்கட்சிகள் எழுப்பும் குரலையும் அரசியலாகப் பார்க்காமல் தமிழக சட்டமன்றம் ஒரு மனதாக 2006இல் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மத்திய அரசு எந்த மதிப்பும் அளிக்க வில்லை என்கிற உணர்வுநிலையில் நின்று பார்த்து  தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.

2.அண்ணா மாநாடு நடத்தியதன் தொடர்ச்சியாக சென்னையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வந்தது.எம்.ஜி.ஆர். மதுரையில் மாநாடு நடத்தியதன் தொடர்ச்சியாக தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் வந்தது. இப்போது கலைஞர் கோவையில் மாநாடு நடத்தித் தமிழுக்கு என்ன கொண்டுவரப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு தமிழ் நெஞ்சங்களில் உருவாகியுள்ளது. அப்படி அவர் செய்வதற்கான அவசியமான சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறோம்.இவற்றில்  சிலவற்றையேனும் இம்மாநாட்டை ஒட்டிக் கலைஞர் செய்வாரா?

(அ) பன்னெடுங்காலமாக அரண்மனைகளும் அதிகார வர்க்கங்களும் ‘ இழிசனர் வழக்கு’ என்று புறக்கணித்த நாட்டுப்புறவியலை சனநாயக அரசுகள் உருவானபின்னும் உரிய முறையில் கண்டு கொள்ளாமல் இருப்பது தமிழுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.நாட்டுப்புற இலக்கியங்களில்தான் உழைப்பாளி மக்களின் வரலாறும் வாழ்க்கைக் கண்ணோட்டமும் பொதிந்து கிடக்கிறது. பல்லாயிரக்கணக்கான நாட்டுப்புறக்கலைகள் கேட்பாரின்றி நாளும் அழிந்து கொண்டிருக்கின்றன. அரண்மனைகளும் ஆடலரங்குகளும் புறக்கணித்த இக்கலைகளை ஏழை எளிய விவசாயிகளும் விவசாயக்கூலிகளுமான கிராமத்து மக்களே இதுகாறும் தங்கள் விழாக்களின் மூலமும் வாழ்க்கைவட்டச் சடங்குகள் மூலமும் பாதுகாத்து வந்துள்ளனர்.உலகமயச்சூழலில் அவை முற்றிலுமாக அழிந்து மறைந்து கொண்டிருக்கின்றன.

நாட்டுப்புற இலக்கியம்-நாட்டுப்புறக்கலைகள் இவற்றை ஆவணப்படுத்தவும் பாதுகாத்து வளர்த்திடவும் வரும் வரும் தலைமுறைக்குப் பரப்பிடவும் ஆய்வுகள் மேற்கொள்ளவும் என ஒருங்கிணைந்த ஒரு நாட்டுப்புறப்பல்கலைக்கழகம் இனியும் தாமதமின்றித் துவங்கப்பட வேண்டும்.

(ஆ) இயற்றமிழின் இரு பெரும் கூறுகளாக எழுத்துத் தமிழும் பேச்சுத்தமிழும் உள்ளன.எழுத்துத்தமிழின் உச்சமாக நம் பரம்பரைச் சொத்தாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன.ஆனால் அவை பெருவாரியான மக்களால் வாசிக்கப்படாமல் பண்டிதர் கைச்சரக்காகவே இன்றும் கிடக்கின்றன.எளிதில் சந்தி பிரித்து  எவரும் வாசித்துப்புரிந்து கொள்ளும் விதமான சங்க இலக்கியப் பதிப்புகளை அரசே கொண்டு வர வேண்டும். அதற்கான அறிஞர் குழுவை நியமித்து செம்மொழி என்பதால் மத்திய அரசிடமும் நிதி பெற்று  இப்பதிப்புகளைக் கொண்டு வர வேண்டும்.

பேச்சுத்தமிழ் என்பது வட்டார வழக்கு எனப்படுகிறது.தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு பேச்சு வழக்கு அதற்கென்று சிறப்பான சொற்கள் இருக்கின்றன. வட்டார வழக்குச் சொற்களைத் தொகுப்பதும் அவற்றை வட்டார வழக்குச் சொல்லகராதிகளாகப் பதிப்பிப்பதும் மக்களை- மக்கள் தமிழை -மதிக்கும் எந்த ஒரு அரசும் உடனே செய்ய வேண்டிய கடமையாகும்.இன்று வரை எந்த அரசும் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.

மேற்குறிப்பிட்ட இரண்டு பணிகளை மட்டும் துவக்கினாலே சில ஆயிரம் தமிழ் படித்த இளைஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் உடனடியான வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

(இ) இசைத்தமிழும் நாடகத்தமிழும் தமிழ்க்கல்விப்புலத்தில் இடமின்றி அழிந்துகொண்டிருக்கின்ற அவலம் தீர்வது எப்போது என்பது அடுத்த கேள்வி. இசைத்தமிழ் இயல் ஒன்றை உருவாக்கி அனைத்துப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் பாடத்திட்டத்தின் பகுதியாக்கிட வேண்டும்.அனைத்துப்பள்ளி/கல்லூரிகளி ல் இசை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

நாடகப்பள்ளி ஒன்றையேனும்  உடனடியாக அரசு துவங்கிட வேண்டும்.குறைந்தபட்சம் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்திலாவது  நாடகத்துக்கான பள்ளி துவக்கப்பட வேண்டும்.முறையான தமிழ் நாடக வரலாறும் பாடத்திட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும்.இப்பளீயில் பயில்வோருக்கு வேலை வாய்ப்பு என்கிற அடிப்படையிலும் நாடகத்தமிழை வளர்க்கும் அடிப்படைப்பணியாகவும் அனைத்துப் பள்ளிகளிலும் நாடக ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

(ஈ)தமிழ் படித்தோருக்கும் தமிழ்வழி படித்தோருக்கும் தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

(உ) மாண்புமிகு அமைச்சர் மு.க.அழகிரி அவர்களின் கோரிக்கையான பாராளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி என்பது மத்திய அரசால் இன்றுவரை உதாசீனப்படுத்தப்பட்டு வருகிறது.எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்துத் தேசிய மொழிகளிலும் பாராளுமன்றத்தில் பேசவும் பதிலளிக்கவுமான உரிமைக்காகப் போராட இம்மாநாடு அறைகூவல் விடுக்க வேண்டும்.

இன்னும் பல கனவுகள் தேவைகள் இருப்பினும் மேலே குறிப்பிட்டவற்றுள் ஒன்றிரண்டைக்கூட அறிவிப்பாக-வாக்குறுதியாகக் கூடச் செய்யாமல் இம்மாநாடு முடிந்துபோனால் அது தமிழுக்குச் செய்த அநீதியாகவே ஆகும்.மத்திய அரசிடம் அனுமதி பேறாமலே செய்யத்தக்க காரியங்களே மேலே குறிப்பிட்டவை எல்லாம்.

மொழியை முன்வைத்த போராட்டக்களங்களில் தலைமைப் பாத்திரம் ஏற்று வளர்ந்த இயக்கம் திமுக.60களைப்பார்க்கிலும்  நம் தமிழ் மொழி பெரும் நெருக்கடிக்குள் சிக்கியிருப்பது இப்போதுதான். ஆங்கிலத்தின் தாக்கத்தால் மொழியே அழியும் அபாயம் நெருங்கிக்கொண்டிருக்கிறது .இந்தி,ஆங்கிலம் என்கிற இரண்டே போதும் என்கிற மத்திய அரசின் மொழிக்கொள்கையால் இந்தியாவின் பல்வேறு தேசிய மொழிகள் கவனிப்பாரற்றுச் சிதைகின்றன.

மொழிக்கான கொள்கைரீதியான போராட்டம் அரசியல் களத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் பாராளுமன்றத்திலும் நீதிமன்றங்களிலும் முன்னெப்போதையும்விடத் தீவிரமாக நடைபெற வேண்டிய ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமயமும் மத்திய அரசின் தேசிய இனங்களை மதிக்காத கொள்கையும் பெரும் தடைக்கற்களாக நம்முன் நிற்கின்றன.இவற்றுக்கு எதிராகப் போராட்டங்கள் வீறுகொண்டு எழ வேண்டும்.அதற்கான திசையில் இம்மாநாடு சிந்திக்காவிட்டால் இந்தக் கொண்டாட்டங்களுக்கும் கோலாகலங்களுக்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

தமிழ் நெஞ்சங்கள்  இன்னும்கூட  நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன.
-
ச.தமிழ்ச்செல்வன்
பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம்

கருத்துகள் இல்லை: